தன்னால் வழங்கக்கூடியவற்றை மாத்திரமே நாட்டுக்கு வாக்குறுதியளிப்பதாகவும், தன்னால் முடியாததை வாக்குறுதியளித்து நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைச் செய்ய தாம் தயாரில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எதிர்வரும் 05 வருடங்களில் நாட்டுக்காக தன்னால் இயன்றதை செய்து இளைஞர்களுக்காக கடன் சுமையற்ற அபிவிருத்தி அடைந்த நாட்டை கட்டியெழுப்புவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
வாழ்க்கைச் சுமையைக் குறைத்தல், தொழில் வாய்ப்புகளை வழங்குதல், வரி நிவாரணம் வழங்குதல், பொருளாதார மேம்பாடு, உறுமய மற்றும் அஸ்வெசும வேலைத் திட்டங்களை செயற்படுத்தி ஒவ்வொரு பிரஜைக்கும் காணி அல்லது வீட்டு உரிமை பெறும் வேலைத்திட்டம் என்பன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று (29) வெளியிட்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
‘தேரவாத வர்த்தகப் பொருளாதாரம், 2025இற்கு அப்பால் செல்லும் செயல்முறை, ஒளிமயமான சமுதாயத்தை நோக்கி, வெற்றிபெறும் தாய்நாடு, ஒன்றிணைந்த இலங்கை’ ஆகிய 05 பிரதான பிரிவுகளை உள்ளடக்கிய ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனம், மகா சங்கத்தினர் உட்பட மதத் தலைவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், இளைஞர்களுக்கும் கையளிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
இந்த தேர்தல் விஞ்ஞாபனம் அடங்கிய www.ranil2024.lk இணையத்தளம் இதன்போது ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
போலி வாக்குறுதிகளை வழங்கி நாட்டை மீண்டும் சரிவிற்குள் தள்ளிவிட வேண்டிய தேவை எனக்கு இல்லை. பொருளாதாரம், அரசியல் என்பன சரிவடைந்த நாடுகளின் நிலையை இன்று நாம் காண்கிறோம். பங்களாதேஷும், மாலைதீவும் அடைந்துள்ள நிலைமை நமக்குத் தெரிகிறது. நாம் கண்ட துர்பாக்கிய நிலையை மீண்டும் உருவாக்கினால் அடுத்த சந்ததியின் எதிர்காலம் சூனியமாகிப் போகும்.
அதனால் நாட்டில் நிலைத்தன்மையைப் பாதுகாத்து பொருளாதாரத்தை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இளையோரின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான சட்டத்தைத் தயாரித்துள்ளோம். அதனை நிறைவேற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக மாறுப்பட்ட பொருளாதார திட்டங்களை செயற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.