இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்று வரும் நிலையில், அதில் இந்திய அணி வீரர்கள் தங்களின் கைகளில் கருப்பு பட்டிகளை அணிந்திருக்கின்றனர். இதற்கான காரணம் என்ன என்பதை இதில் காணலாம்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையுடன் இன்று விளையாடி வருகிறது.
3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை விளையாட இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி, வௌ்ளையடிப்பு செய்தது.
டி20 தொடரை தொடர்ந்து, ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி 2.30 மணிக்கு தொடங்கியது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது பந்துவீசி வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பலரும் எதிர்பார்த்தவாறு ரோஹித், கில், விராட், ஷ்ரேயாஸ், கேஎல் ராகுல் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர். ரிஷப் பண்டுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சிலும் அக்சர் படேல், சிராஜ், அர்ஷ்தீப், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றனர். ஆல்-ரவுண்டர்களாக வாஷிங்டன் சுந்தரும், சிவம் தூபேவும் இன்று களமிறக்கப்பட்டனர்.
பலரும் எதிர்பார்த்தவாறு ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரியான் பராக், கலீல் அகமது ஆகியோருக்கும் இன்று வாய்ப்பில்லை. இதன்பின், ஆக. 4ஆம் தேதி 2ஆவது டி20 போட்டியும், ஆக. 7ஆம் தேதி 3ஆவது டி20 போட்டியும் இதே கொழும்பு பிரேமதாசா மைதானத்தில்நடைபெற உள்ளது.
இந்நிலையில், இன்றைய போட்டியின் போது இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டியை அணிந்து விளையாடி வருகின்றனர். பலரும் எதற்காக இதனை அணிந்து விளையாடுகின்றனர் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து பிசிசிஐ அதன் X தளத்தில்,"இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட் நேற்று முன்தினம் (ஆக. 31) உயிரிழந்த நிலையில், அவரின் நினைவாக இந்திய அணியினர் இன்று கையில் கருப்பு பட்டி அணிந்துள்ளனர்" என விளக்கம் அளித்துள்ளது.
அன்ஷுமான் கெய்க்வாட் இந்திய அணிக்காக சர்வதேச அரங்கில் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1985 ஓட்டங்களை குவித்திருக்கிறார். அவரின் அதிகபட்ச ஸ்கோர் 201 ஆகும். மேலும், 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 ஓட்டங்களை எடுத்திருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில் 206 போட்டிகளில் விளையாடி 12 ஆயிரத்து 136 ஓட்டங்களை அவர் குவித்திருக்கிறார்.