Our Feeds


Thursday, August 8, 2024

Zameera

நாட்டு மக்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவே தேர்தலில் போட்டியிடுகிறேன்


 ஏனைய வேட்பாளர்கள் தமது எதிர்காலத்திற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற அதேவேளை, நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காகவே தான் போட்டியிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அந்த நிலையிலிருந்து நாட்டைக் காப்பாற்றி ஆளுமைமைய வெளிப்படுத்தியுள்ளதால் தனக்கு யாருடனும்  போட்டி கிடையாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கம் ஆரம்பித்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் ஆணையை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களிடம் கோருவதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் இன்று (07) நடைபெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியம் அல்லது கடன் வழங்குநர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது எனவும், அவ்வாறு செய்தால் இலங்கைக்கு அந்த நிதியை இழக்க நேரிடும் எனவும் எனவே அனைத்து வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு உண்மையை கூற வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சிலரால் ஊழலைப் பற்றி பேச மட்டுமே முடிகிறது. ஆனால் ஊழலைத் தடுக்க பல சட்டங்களை இயற்றியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மோசடி ஊடாகச் சம்பாதித்த சொத்துகள் தொடர்பாக விசாரிப்பதற்கான சட்டமூலத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எவரையும் தாம் ஒருபோதும் பாதுகாக்கவில்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

''ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்திய பின்னர் முதன்முறையாக ஊடகவியலாளர்களைச் சந்திக்கத் தீர்மானித்தேன்.வேறு எவரும் முன்வராத காரணத்தினால் தான் இன்று நான் ஜனாதிபதியாக செயற்படுகின்றேன். நான் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்களுக்குள் நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுத்தேன். இலங்கையின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்றும் கூறினார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து கிரீஸ் மீள 10 வருடங்கள் ஆனது. இந்தோனேசியாவிற்கு 8 வருடங்கள் பிடித்தது. இந்த பிரச்சினையை இலங்கை எவ்வாறு தீர்க்கும் என சிலர் கேள்வி எழுப்பினர்.

ஆனால் இந்த பிரச்சினையை குறுகிய காலத்தில் தீர்க்க முடியும் என்று நான் நம்பினேன். இது தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடினேன். அதனால் அச்சமின்றி இந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். ஆனால் என்னை ஆதரிக்க எந்த ஒரு தனிக் கட்சியும் இருக்கவில்லை. பொதுஜன பெரமுனவின் ஒரு குழு எம்முடன் இணைந்தது. மற்றொரு குழு எதிர்க்கட்சிக்கு சென்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குழுவும் எம்முடன் இணைந்தது. சிலர் எதிர்க்கட்சியில் இணைந்தனர். நான் கட்சியொன்றில்லாமல் ஆட்சி அமைத்து இந்தப் பொறுப்பை ஏற்றேன். இப்போது முதற்கட்ட பணிகளை முடித்துவிட்டோம். நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்க நாம் இப்போது வழி வகுத்துள்ளோம். அந்தப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.

இந்த நாட்டின் பொருளாதார முறைமை சீர்குலைந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், வரிச்சுமை அதிகரித்ததால், சிலர் அதனைச் சுமக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் அதைச் செய்யாமல் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுக்க முடியவில்லை. நாம் உண்மையைச் சொல்வதற்குத் தயாராக இல்லை என்பதே எமது நாட்டு அரசியலில் உள்ள சிக்கலாகும். 

ஸ்திரத்தன்மை இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது. பங்களாதேஷில் நடைபெறும் விடயங்களை தொலைக்காட்சியில் பார்த்தபோது, இந்த நாட்டைக் பொறுப்பேற்றிருக்காவிட்டால் எமது நாட்டின் கதி என்னவாக இருந்திருக்கும் என்று  சிந்தித்தேன். பங்களாதேஷ் பிரதமருக்கு விலகுமாறு கூறப்பட்டாலும் நிர்வாகத்தை ஏற்க எந்த நிறுவனமும் இருக்கவில்லை. இராணுவம் தலையீடு செய்ய முயன்றாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். முஹம்மது யூனுஸை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். அந்நாட்டு  அரசியலமைப்புச் சட்டம் பிரதமராக வருவதற்கு எம்.பி.யாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. அந்த நிலை எமது நாட்டுக்கு வந்தால் என்ன நடக்கும்? எமது நாடு அதிர்ஷ்டகரமான நாடு. எப்படியாவது ஒரு அரசாங்கத்தை உருவாக்கினோம். அதனால்தான் இன்று ஜனாதிபதி தேர்தலை நடத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் எதிர்காலத்தையே நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இந்தப் பாதையில் தொடர்ந்து முன்னேறி அபிவிருத்தியடைந்த  நாடாக மாறப்போகிறோமா? நாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப் போகிறோமா? இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கப் போகிறோமா?  இல்லையேல் பழைய அரசியலில் ஈடுபட்டு பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைந்து வரிசை யுகத்திற்கு செல்லப் போகிறோமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

முகங்களைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நாட்டைக் காப்பாற்றும் வலிமையும், கொள்கையும் தங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்பதை தான் மக்கள் தீர்மானிக்க வேண்டும். இந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களின் எதிர்காலத்தையன்றி  நாட்டின் எதிர்காலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தைத் தான் தீர்மானிக்க வேண்டும். இங்கிருந்து படிப்படியாக முன்னேறுவதா, நாட்டின் பிரச்சினைகளை பலத்துடன் தீர்ப்பதா அல்லது 2022இல் இருந்த நிலைக்கு செல்வதா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடனும், எமக்கு கடன் வழங்கும் நாடுகளுடனும் செய்துள்ள ஒப்பந்தங்கள் எதனையும் மீற முடியாது. தற்போதுள்ள இந்த இலக்குகள் மற்றும் வரையறைகளை மாற்ற முடியாது. அப்படி செய்தால் எமக்கு நிதி கிடைக்காது. அந்த நிலையில்  நமது நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும்.

பல்வேறு கட்சிகளும்  வெவ்வேறு வாக்குறுதிகளை அளிக்கலாம். ஆனால் அவற்றை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. அந்த நிலையில் வெட் வரியை அதிகரிக்க நேரிடும். அதுதான் யதார்த்தம். உண்மையைச் சொல்லி நாட்டைக் காப்பாற்றத் தயாரா, பொய் சொல்லி ஆட்சியைப் பிடிக்கத் தயாரா என்பதைச் சிந்திக்க வேண்டும். எனவே, அரசாங்கம் ஆரம்பித்துள்ள இந்த வேலைத் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க  மக்கள் ஆணையை கோருகிறேன்" என ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளித்த பதில்களும்  பின்வருமாறு:

கேள்வி:

தம்மிக்க பெரேரா போட்டியிலிருந்து விலகிய நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவில் உள்ள பெரும்பாலானோர் உங்களுடன் இருக்கிறார்கள். ஆனால்   நாமல் ராஜபக்ச  கடும் போட்டியாக இருப்பார் என்று எதிர்பார்க்கிறீர்களா?

பதில்:

போட்டி எப்படி அமையும் என்பது தெரியவில்லை. நான் யாருடனும் மோதலுக்கு வரவில்லை. நாட்டைக் கட்டியெழுப்பும் கொள்கையை மக்களிடம் முன்வைத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வழியை காட்டவே முன்வந்துள்ளேன். அந்த கொள்கைகளை விரும்பினால் வாக்களிக்கலாம். மற்றவர்கள் சொல்வதை நான் பொருட்படுத்தப்போவதில்லை.

நாமல் ராஜபக்ஷவும் பொதுஜன பெரமுனவும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்தனர். அதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இரண்டு வருடங்கள் ஒற்றுமையாக பணியாற்ற இணங்கினோம். இப்போது இரண்டு ஆண்டுகள் கடந்துள்ளன. வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதா அல்லது முன்னிலைப்படுத்துவதா என்பதை அந்தக் கட்சி தீர்மானிக்க வேண்டும். அதற்கிணங்க, இப்போது நாம் நாட்டுக்கு உண்மைகளை சொல்ல வேண்டும்.

இது எனக்கான போராட்டம் அல்ல. எதிர்காலம் என்னவென்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். எனது திட்டத்தை ஏற்றால் அதற்கு வாக்களியுங்கள் அல்லது வேறொருவருக்கு வாக்களியுங்கள்.

கேள்வி - வாகன இறக்குமதிக்கு அனுமதியளிப்பதன் மூலம் அதற்கான வரியை அதிகப்படுத்தி ஏனைய பொருட்களுக்கான வரிகளை குறைக்க முடியுமா?

பதில் - அடுத்த வருடம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதியளிக்க முடியுமென நம்புகிறோம். வருமானம் ஈட்ட எமக்கு சுங்க வரி தேவைப்படுகிறது. மேலும் நமது வெளிநாட்டு கையிருப்பு போதுமான அளவை எட்டும் வரை காத்திருக்கிறோம். அப்போது வாகன இறக்குமதிக்கான வாய்ப்புகளை வழங்க முடியும். வாகன இறக்குமதியின் மூலம் கிடைக்கும் வரி வருமானம் அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய வருமான ஆதாரமாகும்.

கேள்வி - இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஏராளமான வேட்பாளர்கள் உள்ளனர். உங்களை மீண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இந்த நாட்டு மக்களுக்காக நீங்கள் என்ன வாக்குறுதியை வழங்குகிறீர்கள்?

பதில் - அடுத்த 05 வருடங்களில் இந்த நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு சென்று நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம். அதை செயலில் நிரூபித்துள்ளேன். இம்முறை மட்டுமல்ல, 2001ஆம் ஆண்டிலும்  வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைக்  கொண்ட நாட்டையே நான் பொறுப்பேற்றேன். அப்போதும் அந்த பொறுப்பை நிறைவேற்றி இருக்கிறேன். எனவே, இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் திறன் என்னிடம் உள்ளது.

ஆனால் ஏனைய வேட்பாளர்கள் வாக்குறுதிகளை மட்டுமே கொடுக்கிறார்கள். அந்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவது என்று அவர்களிடம் கேட்க வேண்டும். பழைய அரசியல் முறையில் செயற்பட்டதாலேயே இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, நாட்டு மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடத் தீர்மானித்தேன். 

கேள்வி - இந்த ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று அதிகாரத்துடன் இருந்த இரண்டு  ஜனாதிபதிகளின் புதல்வர்கள் போட்டியிடுகின்றனர். மறுபுறம் அரச அதிகாரம் கிடைக்காத இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த நான்கு முனைச் போட்டியில் மற்ற வேட்பாளர்கள் உங்களுக்கு போட்டியாக அமைவார்களா?

பதில் - இவை எதுவும் எனக்கு சவால் இல்லை. நான் இந்த நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக பணியாற்றுகிறேன். ஆனால் அவர்கள் தமது எதிர்காலத்திற்காக பணியாற்றுகிறார்கள். எனவே, முடிவை நீங்களே எடுக்க வேண்டும். அனுர திஸாநாயக்க எனது நல்ல நண்பர். அவருடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்தும் எதிராகவும் அரசியல் செய்துள்ளேன். ஜனாதிபதி பிரேமதாசவை பதவி நீக்கம் செய்ய திட்டமிட்ட போதும் நானே காப்பாற்றினேன்.

கேள்வி - தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் அந்த வர்த்தமானி தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. இம்முறை அந்த 1700 ரூபா கிடைக்குமா?

பதில் - தொழில் அமைச்சினால் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் சிலர் அதற்கெதிராக நீதிமன்றத்திற்கு சென்றனர். தற்போது அந்த நிறுவனங்கள் தொழில் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இலங்கையில் இன்று விவசாய பொருளாதாரம் உருவாகியிருக்கிறது. 

சில நிறுவனங்களினால் அந்தத் தொகையை வழங்க முடியும் என்றால் மற்றைய நிறுவனங்கள் அதைச் செய்யாமல் இருப்பது நியாயமற்றது. சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென கூறும் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட காணியை சம்பள அதிகரிப்பு வழங்கும் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த தொகையை தோட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் கஷ்டங்களுடன் வாழ்கின்றனர்.  அதனால் லயன் அறைகள் உள்ள பகுதிகளை கிராமங்களாக கட்மைக்க நடவடிக்கை எடுப்போம்.

கேள்வி - IMF உடனான திட்டத்தின் எதிர்காலம், நடைமுறைச் செயற்பாடுகள், இதன் பின்னர் நாம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில் - சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அதை செயல்படுத்த வேண்டும். இந்த உடன்படிக்கையை நாம் கடைப்பிடித்தால், எமக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. மாற்றுத் திட்டங்களைக் கொண்டிருப்பவர்கள் அவற்றை வௌியிட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகள் மற்றும் நியதிகள் மாற்றப்படாது. அவர்கள் ஒவ்வொரு நாடுகளுக்குமான அளவுகோள்களை கொண்டுள்ளனர். யாராவது எதையாவது இலவசமாகக் கொடுக்க முன்வந்தால், VAT வரியை 25% ஆக அதிகரிப்பதன் மூலம் அதை ஈடுசெய்யலாம் என்று எண்ணினால், புள்ளிவிவரங்களை சீரமைக்க முடியும் என்று நினைத்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுகளை எட்டலாம். ஆனால் இந்த அளவீடுகள், வருமான அளவு மற்றும் செலவு அளவுகளை எவராலும் மாற்ற முடியாது.

கேள்வி : 2048 ஆகும் போது எமது நாடு வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் இவர்களில் பலர் 2048 இல் உயிருடன் இருப்பார்களா என்று பலரும் யோசிக்கலாம். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் அதற்காக என்ன செய்வீர்கள்?

பதில்: இங்குள்ள பலர் 2048க்குள் ஏன் இல்லை என்று நினைக்கிறீர்கள். இன்று 40 வயதை உடையவர்கள் அப்போது 65 வயதாகுவார்கள். இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள். அப்போது இன்று இருக்கும் பெரும்பாலானவர்கள் இருப்பார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. நாம் வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும்.  இந்தியா 2047இலும்,  சீனா 2029 இலும் வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என்று கூறியுள்ளன.

2048 என்று நாம் கூறுகிறோம். எனவே தமது நாடு வளர்ச்சியடைவதை விருப்பமில்லையா?  50 வருடங்களில் சிங்கப்பூர் வளர்ச்சியடைந்தது. இந்த அரசியல் முறையை நாம் மாற்ற வேண்டும். நாம் தொலை நோக்குடன் சிந்திக்க வேண்டும். பொய் சொல்வதால்தான் இன்று இந்த நிலையில் இருக்கிறோம். இதுதான் அரசியலில் உள்ள பிரச்சினை.

அதனால் தான் இந்த ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். இதில் மாற்றம் செய்யப்பட வேண்டும். தனது கட்சியில் இருந்து கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசும்போது  நாட்டின் அரசியல்   வீழ்ச்சியடைகிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் மாற்றுப் பிரதமர். ஆட்சியைப் பொறுப்பேற்கும் படி கூறும்போது  ஏன் ஓட வேண்டும்?  அரசியல் கட்சித் தலைவர் ஒருவருக்கு ஆட்சி கிடைத்தால்  அவர் அதை ஏற்றுக்கொள்வார். மாறாக கைவிட மாட்டார். ஜனாதிபதி பதவியை ஏற்குமாறு  கேட்டபோதும் முடியாது என்று சபாநாயகரிடம் ஒப்படைக்குமாறு கூறினார்கள். பாராளுமன்றத்தை என்னால் நிர்வகிக்க முடியும் .ஆனால் என்னால் இதனை செய்ய முடியாது என சபாநாயகர் தெரிவித்தார்.

கேள்வி:
உங்களுக்கும் நீதிமன்றத்துக்கும் இடையே ஏதேனும் முரண்பாடு உள்ளதா? சபாநாயகருக்கு பிரதம நீதியரசருடன் கலந்துரையாடி பொலிஸ் மா அதிபர் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு  அண்மையில் நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். ஆனால் இன்று வரை அது நடக்கவில்லை.

பதில்:
அது அவர்கள் இருவருக்கும் இடையில் நடக்க வேண்டிய ஒன்று. நான் ஒரு பரிந்துரையையே செய்தேன். இதன்போது நீதிமன்றம் ஒரு விதமான தீர்ப்பை வழங்கியது. பாராளுமன்றம் மற்றுமொரு தீர்மானத்தை எடுத்தது. அன்று நீதித்துறைக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்ட போது, அப்போதைய சபாநாயகராக இருந்த அனுர பண்டாரநாயக்க தீர்மானம் ஒன்றை எடுத்தார்.

அது அங்கேயே முடிந்தது. நான், வெளியில் இருந்து இந்த பரிந்துரையை முன்வைத்தேன். அதனை செய்யலாமா வேண்டாமா என்பது அவரவர் முடிவு. சபா நாயகரையோ,  பிரதம நீதியரசரையோ நான் வற்புறுத்த முடியாது. ஜனாதிபதி என்ற வகையில் நான் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவன். பாராளுமன்றம் வழங்கிய முடிவை நான் அமுல்படுத்த வேண்டும்.

கேள்வி:
தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதை நீங்கள் எவ்வாறு கையாள்கிறீர்கள்? மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி திட்டங்கள் என்ன?

பதில்:
இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியையின்போது அதுபற்றி நான் தெளிவாக எடுத்துரைத்தேன். மேலும், தமிழ் எம்.பி.க்கள் மற்றும் ஏனைய கட்சிகளுடன், குறிப்பாக அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அது குறித்து கலந்துரையாடுவோம். இதை நாம் அவசரமாக செயல்படுத்த வேண்டும்.

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டும். எனவே இந்த பிரச்சினைகளை நாம் முடிக்க வேண்டும். எரிபொருள் மற்றும் மின்சாரம் இல்லாமல் வரிசையில் நிற்கும் யுகத்திற்கு நாம் யாரும் மீண்டும் செல்ல விருப்பமில்லை.

கேள்வி:
அடுத்த தேர்தலில் மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என்று எவ்வளவு தூரம் நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்?

பதில்:
அது மக்களின் வாக்கு உரிமையைப் பயன்படுத்துவதற்கான உரிமை. பெரும்பான்மையானவர்கள் எனது முன்மொழிவுகளை ஆதரிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கும் தலைவர்கள் தேவையா அல்லது சவால்களை எதிர்கொள்ளப் பயந்து ஓடுகின்ற தலைவர்கள் தேவையா என்பதே வாக்காளர்கள் முன் உள்ள கேள்வி.

கேள்வி:
பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள் உங்களுடன் இருப்பதால் அவர்களுடன் இணைந்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்:
என்னுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருந்தால், அவர்கள் மீது வழக்குத் தொடரலாம். அது எதையும் நான் நிறுத்தவில்லை.குற்றச்சாட்டு  உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதா இல்லையா என்பதை வாக்காளர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இதுவரை யாரும் செய்யாத வகையில் ஊழல் தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.

குற்றச் செயல்களால் சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்படும். அனைவரும் ஊழல், ஊழல் என்று  கூக்குரலிட்டாலும்,  அதற்கு என்ன செய்வது என்று யாரும் கூறவில்லை. ஆனால் நாம் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.  

எனது அடுத்த பயணம் ஜனாதிபதியாக வேண்டும் என்பதே. அவர்களின் அடுத்த பயணம் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே. வாக்காளர்கள் அவர்களை நிராகரித்தால், அந்தப் பிரச்சினை அத்துடன் முடிவு பெறும். எனது ஆட்சிக் காலத்தில் யாரேனும் ஒரு எம்.பி.க்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு  நான்  எவ்வித அழுத்தங்களையும் பிரயோக்கவில்லை. 

நான் யாரையும் பாதுகாக்கவில்லை. அரசியலில் நாம் வெவ்வேறு நபர்களுடன்செயற்படுகிறோம். அவர்கள் திருடர்களா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பது சட்டம் சார்ந்த விடயமாகும்.

நான் பிரதமராக இருந்த காலத்தில் பல  பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இறுதி முடிவு நீதிமன்றத்திடம் உள்ளது. இப்போது ஒரு அமைச்சர் மீது நீதிமன்ற வழக்குகள் உள்ளன. நான் அதை நிறுத்தச் சொன்னேனா? நான் அதனை நிறுத்தினால் தான் அது தவறு" என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »