Our Feeds


Tuesday, August 20, 2024

Sri Lanka

ரணிலுக்கு ஆதரவளிக்காத காரணம் சொன்ன ரிஷாட் பதியுதீன்!



ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் எமக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை. அவரை பொறுத்தவரையில் எங்களிடத்தில் நல்லெண்ணமே இருக்கிறது. ஆனால் அவருடன் சேர்ந்து இருக்கிற கூட்டம் இந்த நாட்டிலே அநியாயத்தை செய்கிற,கொடூரமாக செயல்படுகின்ற ஜனாஸாக்களை எரித்த எதிர்ப்பதற்கு உத்தரவிட்ட அந்த ஜனாதிபதியுடன் கை கோர்த்து உள்ளவர்கள் இன்று யாருடன் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.

இதனாலேயே நாங்கள் ரணில் விக்கிரமசிங்க ஆதரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மன்னார், முசலியில் நேற்று (19) மாலை இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது ஆதரவு தெரிவித்த நிலையில் முதல் முதலாக இக்கிராமத்திற்கு வருகை தந்து பேசக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடைபெற உள்ள தேர்தலில் நாங்கள் ஏமாந்து விடாது புத்தி சாதுரியமாக எமது வாக்குகளை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.இக் காலத்தில் நாங்கள் மிக நிதானமாக சிந்திக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் நான்கு வேட்பாளர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது.

அவர்களின் நாங்கள் மூன்று வேட்பாளர்களை நிராகரித்து விட்டு, ஒருவரை மாத்திரம் ஏன் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று நீங்கள் சிந்திக்கலாம். இந்த நாட்டிலே எதிர் காலத்தில் இனவாதம் இருக்க கூடாது என்று ஆசைப்படுகிறோம். ஜனாஸாக்களை எரிக்கின்ற கேடு கெட்ட ஜனாதிபதி இந்த நாட்டிலே மீண்டும் வந்து விடக் கூடாது என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்.

இவ்வாறு ஜனாஸாக்களை எரிகின்ற போது கைகட்டி பார்த்துக் கொண்டு இருந்தவர்கள், அமைச்சரவையில் இருந்தவர்கள், அதற்கு பக்கபலமாக இருந்தவர்கள், 144 உறுப்பினர்களுடன் பாராளுமன்றத்தை வென்ற ஜனாதிபதி கோட்டபாய அவர்களுக்கு 20 ஆவது திருத்தச் சட்டத்தை வெல்லச் செய்வதற்காக எமது சமூகத்தை சேர்ந்த 6 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். எமது சமூகத்தை அழிக்க கை உயர்த்திய அந்த கூட்டம் இன்று எங்கே இருக்கிறார்கள் என்று பாருங்கள்.

இந்த நாட்டிலே ஒரு காலத்தில் ஆயுத கலாச்சாரத்தை தூது விட்டவர்கள், தற்போது ஜனநாயகத்தை பேசுகின்றவர்கள், அவர்கள் இன்று எந்த மார்க்கத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை. அவர்கள் நாஸ்திக கொள்கையைக் கொண்டவர்கள்.

இவ்வாறானவர்கள் உடன் இணைந்து நாங்கள் இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கொடுக்க முடியுமா?, என்று சிந்திக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எமக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை. அவரை பொறுத்தவரையில் எங்களிடத்தில் நல்லெண்ணமே இருக்கிறது.

ஆனால் அவருடன் சேர்ந்து இருக்கிற கூட்டம் இந்த நாட்டிலே அநியாயத்தை செய்கிற, கொடூரமாக செயல்படுகின்ற ஜனாஸாக்களை எரித்த எதிர்ப்பதற்கு உத்தரவிட்ட அந்த ஜனாதிபதியுடன் கோர்த்துள்ளவர்கள் இன்று யாருடன் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். இதனாலேயே நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றது என்று ஏமாந்து விடாதீர்கள். அரசாங்கம் என்பது மக்களின் பணம். அரசாங்கத்தில் யார் யார் எல்லாம் இருக்கின்றார்களோ அவர்களினால் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியும். எனவே இந்த நாட்டிலே மீண்டும் ஒரு முறை இனவாதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். நான் மட்டுமல்ல சிறுபான்மை தலைவர்களும் சஜித் பிரேமதாசவுடன் கைகோர்த்துள்ளனர்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கூடிய சட்ட வல்லுநர்கள் பலர் இருக்கின்றனர். இனவாதத்திற்கு எதிரான சமூக பற்றுள்ளவர்கள் இருக்கிறார்கள். கரைபடியாத உள்ளங்கள் பலர் இருக்கின்ற அணியாகவே சஜித் பிரேமதாச அணி இருக்கின்றன.

அந்த அணியை பலப்படுத்துகின்ற கடமை தமிழர்களுக்கும், முஸ்ஸீம்களுக்கும், மலையக தமிழர்களுக்கும் இருக்கின்றது. இந்த மூன்று சமூகத்தின் வாக்கும் மிகவும் பெறுமதியான வாக்குகளாகவே இருக்கின்றது. எனவே சஜித் பிரேமதாச அவர்களுக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகளும் அமோக வெற்றிக்கு வழிவகுக்கும்.

எதிர்வரும் 22 ஆம் திகதி தேர்தல் முடிவு வருகின்ற போது சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வருவார். மன்னார் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்போம். எனவே அனைவரும் உங்கள் வாக்குகளை சீரழிக்காமல் சஜித் பிரேமதாசவிற்கு வழங்கி வெற்றி பெறச் செய்யுங்கள் என தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »