ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருப்பவர்கள் மஹிந்த ராஜபக்ஷவிடம் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும். அதனைச் செய்யாததாலேயே இந்தத் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கான ஆதரவு நூறையும் தாண்டிவிட்டது. எதிர்வரும் சில நாட்களில் பாராளுமன்ற பெரும்பான்மையில் 115 விடவும் அதிகமானவர்கள் அவருக்கு ஆதரவளிப்பார்கள். அத்துடன் இன்னும் மேலும் பல அரசியல் கட்சிகள் இணைந்துக்கொள்ளும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
அவர் சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியிருக்கிறார். வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்ததும் சின்னம் அறிவிக்கப்படும். அதற்கிடையில் பலர் இணைந்துகொள்வார்கள். இது எங்களுக்கு பழக்கப்பட்ட விடயம். 2015ஆம் ஆண்டு தேர்தலிலும் இதனை செய்திருக்கிறோம். அது மட்டுமல்லாமல் பல்வேறு தேர்தல்களில் இதனை செய்திருக்கிறோம். வெளிப்படையாக அதுவொரு கூட்டணி என்றாலும் சுயாதீன வேட்பாளரே தேர்தலில் போட்டியிடுவார்.
தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் மத்தியில் 225 பேரில் ஒருவராவது ஆதரவாகவே இருக்கிறார். வரலாற்றில் அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்று அவை இல்லாமலும் சென்றுள்ளன. பின்னர் மீண்டும் முன்னேற்றமடைந்த சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. இதுபோன்று பல்வேறு சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. மிகவும் பழைமையான அரசியல்வாதிகள் சிந்தித்து தீர்மானம் எடுக்கவேண்டும்.
நானும் பொதுஜன பெரமுனவிலுள்ள பலருடன் பல வருடங்கள் கடமையாற்றியிருக்கிறேன். மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டணியின் செயலாளராக 11 வருடங்கள் கடமையாற்றியுள்ளேன். அதன்போது முன்னேற்றத்தையும் வீழ்ச்சியையும் நான் அவதானித்திருக்கிறேன். அவற்றை முகாமைத்துவம் செய்து கொள்ள நாமே தெரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த வரலாறுகளை விட மாறுபட்ட நிலைமையே இன்று இருக்கிறது. மக்கள் சிந்திக்கும் விதம், எதிர்பார்ப்புகள் மாற்றமடைந்துள்ளன. பாரம்பரிய அரசியல் செய்ய முடியாது. நாட்டில் இருக்கும் நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதே எந்தவொரு தலைமைத்துவத்தினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும். ஆனால், கோட்டா அரசாங்கத்தின் தலைமைத்துவத்தினால் அதனை செய்ய முடியாமல் போனது.
அந்த பின்னணியிலேயே ரணில் தலைமைத்துவத்தை பொறுப்பேற்று நாட்டின் நிலைமையை சீராக்கினார். சுமுகமான நிலையில் ஆட்சி செய்வதற்கு பெயர் தலைமைத்துவம் இல்லை. நெருக்கடி போன்று சவால்களை எதிர்கொண்டு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதே தலைமைத்துவமாகும்.
இந்த தீர்மானத்துக்காக யாரையும் சென்று தனிப்பட்ட ரீதியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. மஹிந்தவை சந்திக்க வேண்டுமென்றால் தொலைபேசியில் அழைத்து கூறிவிட்டு அடுத்த ஒரு மணிநேரத்தில் அவரை சந்திக்க முடியும்.
அவருக்கு வாக்கு சந்தைக் கூட இல்லாத காலத்திலேயே மஹிந்தவுடன் நாங்கள் அரசியல் செய்தோம் என்பதை தற்போது பெரிதாக கதை பேசுபவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். போர்க்காலத்தில் யாரும் வெளியில் செல்ல முடியாமல் இருந்த சந்தர்ப்பத்தில் கொழும்பிலிருந்து கதிர்காமத்துக்கு நடந்துச் செல்லக் கூடியவர்கள் நான் உட்பட ஒருசிலரே இருக்கிறார்கள். அதனால், பொதுஜன பெரமுனவில் இருப்பவர்கள் மஹிந்தவிடம் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும். அவரிடமிருந்து கற்றுக்கொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Friday, August 2, 2024
மஹிந்தவிடம் கற்றுக்கொள்ளுங்கள் - அமைச்சர் சுசில் அறிவுரை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »