Our Feeds


Monday, August 5, 2024

Sri Lanka

இன, மத பேதமின்றி நாட்டைக் கட்டியெழுப்புவோம் - ரணில் விக்ரமசிங்க!


இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டியது அவசியம் என்பதை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன, மத பேதமின்றி நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் இலங்கையர் என்ற வகையில் அனைவரும் ஒன்றுபட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 03 ஆம் திகதி பிற்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் பத்திரிகை பணிமனைக்கு சென்றிருந்தோடு, அதன் ஊழியர்களையும், ஏனைய ஊடகவியலாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது பத்திரிகை பணிமனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், தலைமை ஆசிரியர் த. பிரபாகரன் ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர்.

அதனை அடுத்து ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, அவர்களின் கேள்விகளுக்கும் சாதகமான பதில்களை வழங்கினார்.

நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்க வேண்டும் என்பதே முதல் பிரச்சினையாக இருந்ததாகவும், கடந்த ஜூன் மாதத்தில் அந்த பிரச்சினையை நிறைவுக்கு கொண்டு வர முடிந்திருந்தமையினால் தற்போது ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவது குறித்து சிந்தித்து வருவதாகவும் தெரிவித்தாார்.

கடந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட சுற்றுப் பயணங்களின் போது இளைஞர்கள் பெரும்பாலும் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பிலான கோரிக்கைகளையே முன்வைத்தனர். அதனால் வடக்கிலும், தெற்கிலும் உள்ள இளையோரின் எதிர்பார்ப்புக்களில் வேறுபாடுகள் தெரியவில்லை என்றும் கூறினார்.

மாகாண சபைகளை வலுவூட்டி அந்தந்த மாகாணங்களின் அபிவிருத்திக்கான பரந்தளவான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதே தனது எதிர்பார்ப்பாகும் என தெரிவித்த ஜனாதிபதி, அனைத்து மாகாணங்களுக்கும் மத்திய அரசாங்கம் உதவிகளை வழங்குமெனவும் உறுதியளித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »