சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், அவ்வாறு நடந்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, வரிகளை குறைப்பதாகவும் பொருட்களின் விலைகளை குறைப்பதாகவும் தமது கொள்கைப் பிரகடனங்களில் சஜித் பிரேமதாசவும், அனுரகுமார திஸாநாயக்கவும் மக்களை ஏமாற்றி நாட்டை நாசமாக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
இதன் ஊடாக, மேடைகளில் அவர்கள் சொல்லும் விடயங்களில் உள்ள உண்மைத் தன்மையை மக்களால் கண்டு கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பொருட்களின் விலைகளையும் வரிகளையும் குறைக்க தானும் விரும்புவதாகவும், எனினும், ரூபாயை பலப்படுத்தி, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் செயற்படுவதன் மூலம் மாத்திரமே தன்னால் அதனைச் செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதனைத் தவிர வேறு மாற்றுவழி இருந்தால் உடனடியாக ஐ.எம்.எப் உடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் அதனை சமர்ப்பித்து கருத்தரிந்து கொள்ளுமாறு சஜித் பிரேமதாஸவிடமும் அநுர திசானாயக்கவிடமும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.
பிட்டகோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று பிற்பகல் (25) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.