பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உருவாக்கப்படும் பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஊடாகவே பொதுத்தேர்தலில் போட்டியிடுவோம். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ படுதோல்வியடைவார் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் பரந்துபட்ட அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.
கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான விபரங்களை வெகுவிரைவில் அறிவிப்போம். மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும், பிரதமருமான தினேஷ் குணவர்தன தலைமையில் பரந்துபட்ட அரசியல் கூட்டணி அங்குரார்ப்பணம் செய்யப்படும்.இந்த கூட்டணி ஊடாகவே பொதுத்தேர்தலில் போட்டியிடுவோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்திலேயே பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எம்மிடம் பலமுறை குறிப்பிட்டார். ஆனால் கட்சியின் நலன் விரும்பிகள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் இறுதி தருணத்தில் அவரை தவறாக வழிநடத்தினார்கள்.
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தேர்தலில் படுதோல்வியடைவார். கட்சியில் இருந்து விலகிச் சென்ற சிரேஷ்ட உறுப்பினர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பலமுறை வலியுறுத்தினோம்.இருப்பினும் கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் அவர் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்றார்.
Tuesday, August 27, 2024
பிரதமர் தலைமையிலான கூட்டணியில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம் - எஸ்.பி.திஸாநாயக்க!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »