Our Feeds


Wednesday, August 7, 2024

Sri Lanka

ஜனாதிபதி தேர்தல் கூட்டணியில் சஜித் - தயாசிறி கைச்சாத்து!



ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தரப்புக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இடையில் சற்று முன்னர் பத்திர முலையில் அமைந்துள்ள வாட்டர் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில்  புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

சுதந்திர கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் .

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு தயாசிறி ஜயசேகர தரப்பு தீர்மானித்த நிலையில் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும,   ஹர்ஷண ராஜகருணா , கலாநிதி ஹர்ஷ டி சில்வா,  கலாநிதி சரித ஹேரத், ஷான் விஜேலால் டி சில்வா , முன்னாள் எம்.பி.க்களான சுஜீவ சேனசிங்க, திலங்க சுமதிபால உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதே வேளை நாளைய தினம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் இத்தரப்பு கையெழுத்திட உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மூன்று தரப்பாக பிரிந்து மூன்று வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கின்றது . அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால ஆகியோரது தரப்பு முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை ஆதரிக்க தீர்மானித்துள்ளது.

மறுபுறம் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா,  மஹிந்த அமரவீரர் ஆகியோர் தலைமையிலான குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வை ஆதரிக்க தீர்மானித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் பெரும்பாலான குழு உறுப்பினர்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவில் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »