Our Feeds


Tuesday, August 6, 2024

Sri Lanka

ஷேக் ஹசீனா இனி அரசியலில் இல்லை - மகன் உறுதி!


தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வௌியேறியுள்ள பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டார் என அவரது மகன் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக, பங்களாதேஷ பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டுச் சென்ற நிலையில், ‘இடைக்கால அரசு விரைவாக அமைக்கப்படும்’ என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

இச்சூழலில், புகழ்பெற்ற எழுத்தாளரும், பேராசிரியருமான சலிமுல்லா கான் தலைமையில், பங்களாதேசத்தில் இடைக்கால அரசு அமையும் என்று பங்களாதேச தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

பங்களாதேசத்தில் தீவிரமடைந்த மாணவர் போராட்டம் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை  (திங்கள்கிழமை) ராஜினாமா செய்தார். இதையடுத்து, பகல் 2.30 மணி அளவில் அவர் தனது சகோதரி ஷேக் ரேஹானாவுடன் பங்களாதேசத்தின் கனபாபன் என்ற இடத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார்.

இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படக் காட்சிகள் வெளியாகி உள்ளன. எனினும், அவர்கள் எங்கு சென்றார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இந்தியாவின் திரிபுராவில் ஹெலிகாப்டர் தரையிறங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, பங்களாதேசத்தை ஒட்டிய 4,096 கிலோ மீட்டர் தூரம் உள்ள எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர் தல்ஜித் சிங் சவுத்ரி கொல்கத்தா விரைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய அந்நாட்டு இராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான், “இடைக்கால அரசு விரைவாக அமைக்கப்படும். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில் இருந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” என தெரிவித்தார்.

இதனையடுத்து, பங்களாதேச தேசிய கட்சி, ஜதியா கட்சி, ஜமாத் இ இஸ்லாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் இராணுவத் தளபதி ஆலோசனை மேற்கொண்டதாகவும், அதன் அடிப்படையில் இடைக்கால அரசு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனையில் பங்கேற்ற பங்களாதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேச தேசிய கட்சி, புகழ்பெற்ற எழுத்தாளரும் பேராசிரியருமான சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு அமையும் என தெரிவித்துள்ளது.

மேலும், இடைக்கால அரசில் டாக்டர் ஆசிப் நஸ்ருல், ஓய்வுபெற்ற நீதிபதி மொகமது அப்துல் வாஹாப் மியா, ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் இக்பால் கரிம் புயியான், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சையத் இஃப்திகார் உத்தின், டாக்டர் தேபபிரியா பட்டாச்சார்யா, மடியூர் ரஹ்மான் சவுத்ரி, ஓய்வுபெற்ற ராணுவ பிரிகேடியர் ஜெனரல் சகாவத் ஹொசைன், டாக்டர் ஹொசைன் ஜில்லூர் ரஹ்மான், ஓய்வுபெற்ற நீதிபதி மாட்டின் ஆகியோர் இடம்பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »