எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் இன நல்லிணக்கம் தொடர்பிலும் சில முற்போக்கான கருத்து நிலைப்பாடுகளை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாசூக்காக அநுரகுமார திசாநாயக்க முன்வைத்திருந்தாலும் சிங்கள தேசியவாதத்தை முன்னிறுத்தி அவர் இப்போது கருத்து வெளியிட ஆரம்பித்துள்ளார். தமது சுய புத்தியை பெளத்த, சிங்கள பேரினவாதத்தில் புதைந்த மனக் கருத்தியலை அப்படியே வெளிக்காட்டி விட்டார் அநுரகுமார.
*வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற அரசியல் படுகொலைகள், காணாமல் போகச் செய்தல் மற்றும் ஆட்கடத்தல்கள் பற்றி புலன் விசாரணைகளை மேற்கொண்டு நிலை நாட்டுதல்
*இவையும் மற்றும் மதத் தீவிரவாதம் காரணமாக இடம்பெற்றுள்ள வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் புலன்விசாரணை மேற்கொள்வதற்கான உண்மை மற்றும் மீள் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் செயற்பாட்டை விஸ்தரித்தல்.
இவை போன்ற முன்னேற்றகரமான அம்சங்கள் அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்தன.
ஆனால், அவையெல்லாம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடப்பட்ட வெறும் பசப்பு வார்த்தைகள்தான் என்பதை அடுத்த 24 மணித்தியாலத்துக்குள்ளேயே அம்பலப்படுத்தி நிற்கின்றார் அவர்.
அசோசியேட்டட் பிரஸுக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் தமது உண்மை முகத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
இலங்கையின் 26 வருடகால ஈவிரக்கமற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது யுத்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமைக் குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியுள்ள எவரையும் தனது நிர்வாகம் தண்டிக்க முயலாது என அநுரகுமார திசாநாயக்க உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து தனது அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள முயலும் எனத் தெரிவித்துள்ள அநுரகுமார திசாநாயக்க பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு தனது அரசாங்கம் முயலுமெனவும் தெரிவித்துள்ளார்.
பொறுப்புக்கூறல் விடயம் பற்றித் தெரிவிப்பதென்றால் பழிவாங்கும் விதத்தில் அது இடம்பெறக்கூடாது, எவரையும் குற்றஞ்சாட்டும் விதத்தில் அது இடம்பெறக்கூடாது, உண்மையைக் கண்டறியும் விதத்திலேயே அது முன்னெடுக்கப்படவேண்டுமெனத் தெரிவித்துள்ள அநுரகுமார திசாநாயக்க, பாதிக்கப்பட்டவர்கள் கூட எவரும் தண்டிக்கப்படவேண்டும் என விரும்பவில்லை. அவர்கள் என்ன நடந்தது என அறியவே விரும்புகின்றார்கள் எனப் புதிய விளக்கமொன்றையும் கூறியிருக்கின்றார்.
பொறுப்புக் கூறல் என்ற அம்சத்துக்கு புது வியாக்கியானமொன்றை முன்வைக்க முயல்கின்றார் போலும் அநுரகுமார திசாநாயக்க.
உண்மைகளைக் கண்டறிய முயல்வோம் அதுவும் குற்றம் இழைத்தவர்களைக் கண்டிக்க மாட்டோம் என்ற முன் நிபந்தனையுடன் எனும் சாரப்பட அவர் கருத்து வெளியிட முனைவது மிகவும் கேலிக்கூத்தானது.
இடதுசாரிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்தப் போலி இடதுசாரிகள் தாங்களும் பெளத்த சிங்கள பேரினவாதத்துக்குள் புதையுண்டு கிடக்கும் இனவெறிப் போக்காளர்கள்தாம் என்பதை இந்தக் கருத்தியல் மூலம் வெளிப்படுத்தி, நிரூபித்து நிற்கின்றனர்.
பெளத்த சிங்கள பேரினவாதத்தின் இருண்ட மனக்குகைக்குள் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அந்தப் பேரினம் புரிந்த யுத்தக் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான கொடூரங்கள், மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மைத் தன்மையின் பேரச்சம் ஆழப் புதைந்து கிடக்கின்றது என்பதை அநுரவின் இந்தக் கருத்து நிலைப்பாடு உறுதியாக வெளிப்படுத்தி நிற்பது கண்கூடு.
தமிழர்களைப்பொறுத்தவரை இது அதிர்ச்சியடையக்கூடிய விடயமல்ல. ஜே.வி.பி. காலாகாலமாக தமிழர் எதிர்ப்பு கொண்டுள்ளது. வடக்கு, கிழக்கு பிரிப்பு, மாகாண சபைகளுக்கு எதிர்ப்பு என்று, ஆழிப்பேரலையின் பின்னரான தமிழர் தாயக கட்டமைப்புக்கு எதிர்ப்பு என்று தமிழர்களுக்கு எதிராக செய்துவந்த அக்கட்சி கூறியிருப்பது புதுமையல்ல.
போர்க்குற்றவாளிகள் மட்டுமல்ல, ஜனாஸாக்களை எரித்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்களுக்கும் நிம்மதியான வார்த்தையை கூறியிருக்கிறார் அநுரகுமார. இதுதான் ஜனநாயகம் என்று அநுரகுமார கருதுவாரானால், கோட்டா வழியில் தனிச் சிங்கள மக்களை மட்டும் அவர் அரவணைப்பாராக இருந்தால் வரலாறு அவரை நிச்சயம் மன்னிக்காது.