Our Feeds


Monday, August 19, 2024

Sri Lanka

அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு கோட்டா எம்மை ஒருபோதும் அழைக்கவில்லை - ரனிலுக்கு அனுர பதிலடி



அரசாங்கத்தை  பொறுப்பேற்குமாறு ராஜபக்ஷக்கள் எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் நெருக்கடிக்கு தீர்வு காண  தயார். அதிகாரத்தை தாருங்கள் என்று ஜனாதிபதி கோட்டாபயவுக்கு  கடிதம் அனுப்பினோம். அந்த கடிதம் கிடைத்தது என்று கூட எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கேள்விக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பதிலளித்துள்ளார். 


அத்துடன் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பது ஊழலுக்கும்,  மோசடிக்குமான முற்றுப்புள்ளி எனவும் ஊழல்வாதிகளுக்கு  தண்டனை வழங்குவது  எமது  பிரதான நோக்கம் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆகவே  ராஜபக்ஷக்கள் ஒருபோதும்  எங்களுக்கு அதிகாரத்தை கொடுக்கமாட்டார்கள் எனவும் ரணில் விக்கிரமசிங்க  ஒரு ஜனாதிபதி, ரணிலின் அளவிற்கு பொய்யுரைத்தால்  பரவாயில்லை. ஆனால் ஜனாதிபதி பதவிக்கு அவ்வாறான விடயங்களை கூறுவது பொறுத்தமற்றது எனவும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 


மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். 


இங்கு மேலும் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாக்க,


குறிப்பாக இந்த ஊடக சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டமைக்கான காரணம் தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் இயக்கம் தொடர்பில் பதற்றமடைந்துள்ள குழுக்கள் முன்வைக்கின்ற குறைகூறல்கள் பற்றிய எங்கள் தரப்பிலான கருத்துக்களை முன்வைப்பதற்காகும். இந்த ஊடக சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் பல்வேறு பங்குதாரர்களான அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்கின்ற தோழர்கள் பங்குபற்றுகிறார்கள். 


எங்களுக்குத் தெரியும் தற்போதய அரசியல் மிகவும் தீவிரமான பாசறைகளாக மாறியிருக்கின்றனது. எங்களின் எதிர் தரப்பான பாசறைகளின் ஒரே நோக்கமாக அமைவது இந்த பாராளுமன்றத்தில் நீண்டகாலமாக அமைச்சுப் பதவிகளை வகித்த அரசாங்கங்களை அமைத்தவர்களே இருக்கிறார்கள். அவர்களின் தோ்தல் இயக்கம் இந்த சிறப்புரிமைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதாகும்.  


அதாவது இந்த நாட்டை அதலபாதாளத்தில் தள்ளிவிட்ட  மோசடிகள் ஊழல்கள் நிறைந்த கலாச்சாரத்தை ஏற்படுத்திய குழுக்கள் பகிர்ந்து கொள்வதிலான மல்லுக்கட்டலில் ஈடுபட்டுள்ளார்கள். ரணில் விக்கிரமசிங்க ஒரு பகுதியை அபகரித்துக் கொள்ள முயற்சி செய்கிறார். நாமல் ராஜபக்ஷ ஒரு பகுதியை வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார். சஜித் பிரேமதாஸ ஒன்றுசோ்ந்த குப்பை மேடுகளை சோ்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார். அதுதான் அவர்களின் தோ்தல் இயக்கம். 


தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் இயக்கத்திற்கு நாங்கள் நீண்ட காலமாக தயாராகி வந்தோம். அதற்காக நாங்கள் பல்வேறு துறைகளை சார்ந்த அமைப்புக்களுடன் செயலாற்றி வந்தோம். சட்டத்தரணிகள் குழுக்கள், பொறியியலாளர்கள், கலைஞர்கள், தொழில்வாண்மையாளர்கள் இளைப்பாறிய முப்படை கூட்டமைப்பைச் சோ்ந்தவர்கள், அதைபோலவே ஏனைய இளைப்பாறியவர்கள், வலது குறைந்தோர், கமக்காரர்கள், மீனவர்கள், இவர்கள் அத்தனைபேரையும் நாங்கள் திட்டமிட்ட அடிப்படையில் அணிதிரட்டி வருகிறோம். 


அதனால் மக்கள் பலமே எங்களின் சக்தியாக மாறியிருக்கிறது. அவர்களின் சக்தியாக மாறியிருப்பது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்த அங்குமிங்கும் தாவிக்கொண்டிருக்கின்றவர்களை ஒன்றுசோ்க்கின்ற அரசியலாகும். அதனால் தற்போது இந்த அரசியல் போராட்டக் களத்தில் கொள்கைப்பிடிப்புள்ள ஒரே ஒரு அரசியல் பாசறைதான் இருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பாசறையே அது. ஏனைய அரசியல் பாசறைகள் அனைத்துமே கொள்கை என்னவென்று கண்டுபிடிக்க முடியாத கட்சிகள் எது என அடையாளம் காணமுடியாத அளவிற்கு கலப்படைந்த பாசறைகளாக மாறியுள்ளது.  


அதனால் நான் நினைக்கிறேன் இந்த தோ்தல் இயக்கத்தின் இந்த பாசறைகளின் பிரிகையிடலை உற்றுநோக்கினால் தேசிய மக்கள் சக்தியின் பலமான தன்மையும் அவர்களின் பலவீனமான தன்மையும் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க நாங்கள் கடந்த 17 ஆம் திகதி எங்களுடைய தோ்தல் இயக்கத்தை தென்னிலங்கையில் தொடங்கினோம். தங்காலை, மாத்தறை, காலியில் பிரதான கூட்டத்தொடர்களை நடாத்தி நேற்றும் கிரிபத்கொட, கொலன்னாவ, கடுவெல மக்களை சந்தித்தோம். 


மக்கள் எம்மை நோக்கி பெருந்திரளாக அணிதிரண்டு வந்தார்கள். எங்களுடைய ஒட்டுமொத்த தோ்தல் இயக்கமும் நாட்டுக்கு என்ன நோ்ந்தது? அதாவது இவர்கள் வரலாற்றில் என்ன செய்தார்கள்? தற்போது நாட்டிலுள்ள நிலைமை என்ன? இதிலிருந்து மீட்டெடுப்பதற்கான வழிமுறை என்ன? ஆகிய விடயங்களை தெளிவுபடுத்தவும் அதிலிருந்து மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள் என்னவென்பதையும் அதற்கான மக்களின் இடையீடு பற்றியும் தெளிவுபடுத்துவதும் தான் எமது ஒட்டுமொத்த தோ்தல் இயக்கத்தின் உள்ளடக்கமாகும்.


ஆனால் எங்களுடைய எதிர்தரப்பினரின் தோ்தல் இயக்கம் என்ன? அவர்கள் மிகவும் பதறிப்போயிருக்கிறார்கள். நீண்டகாலமாக அங்குமிங்கும் ஊசலாடிக்கொண்டிருந்த அரசியல் இத்தகைய தனித்துவமான அரசியல் நிலைமாற்றமாக மாறுமென அவர்கள் ஒருபோதுமே எதிர்பார்க்கவில்லை. அந்த ஊழல் மிக்க நாசகார கும்பலிடமிருந்து பொதுமக்களின் இயக்கமொன்றுக்கு அதிகாரம் கைமாறுமென அவர்கள் கனவில் கூட நினைத்துப்பார்க்கவில்லை.  


இங்கும் அங்கும் மாறி மாறி தாவிக்கொண்டு அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியுமென அவர்கள் சதாகாலமும் நினைத்தார்கள். சில வேளைகளில் மக்கள் அரசாங்கங்களை மாற்றுகிறார்கள். மக்கள் அரசாங்கங்களை மாற்றும்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தரப்பினை மாற்றிக்கொள்கிறார்கள். இறுதியாக பார்க்கும்போது இவர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்றில் அமைச்சுப் பதவியை வகித்தவர்கள் அல்லது நீண்டகாலமாக பிரதியமைச்சர் பதவியை வகித்தவர்கள் அல்லது நீண்டகாலமாக அரசாங்கத்தில் இருந்தவர்களாவர். 


இவர்கள் தான் இப்பொழுது மூன்று குவியல்களாக பிரிந்திருக்கிறார்கள். நாங்கள் ஒரு பலம்பொருந்திய இயக்கம் என்ற வகையில் இதற்கு முகம்கொடுத்திருக்கிறோம். அவர்களின் சதாகால அரசியல் சூதாட்டமாக நிலவியது அங்குமிங்கும் அரசியல்வாதிகளை பொறுக்கியெடுத்து தோ்தல் மேடைகளில் ஏற்றி நாங்கள் இணைப்பிரியாத நண்பர்கள் என்று கூறி மக்களை ஏமாற்றுவதாகும். இப்போது அந்த அரசியல் முற்றாகவே நீங்கிவிட்டது.  


கொள்கைப்பிடிப்புள்ள, திட்டமிட்ட அடிப்படையிலான அரசியலில் தேசிய மக்கள் சக்தி பிரவேசித்துள்ளது. அதனால் எதிரிகள் கட்டுக்கடங்காமல் பதறிப்போயிருக்கிறார்கள். மிகவும் பொய்யான, சமூகம் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளாத குறைகூறல்களை முன்வைத்து வருகிறார்கள். நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் எத்கந்த விகாரையின் பெரஹெராவை  நிறுத்துவோம் என  குருணாகலில் ஐக்கிய மக்கள் சக்தி மேடையில் ஒரு உறுப்பினர் கூறினார்.  


நான் இதைப்பற்றி ஒருபோதுமே கூறவேண்டுமென நினைக்கவில்லை. அந்த கூற்றினைவிடுத்த உறுப்பினர் முப்பது நாற்பது தடவைகளுக்கு மேல் எங்களை எடுத்துக்கொள்வீர்களாக என எங்களுக்கு பின்னால் வந்து கெஞ்சிக்கொண்டிருந்தார். அவர் எனக்கு வட்சப் மூலமாக செய்திகளை அனுப்பிவைத்திருக்கிறார் எங்களுக்கு சார்பாக அவர் குரல் கொடுத்ததாக, அந்த வீடியோக்களை எங்களுக்கு அனுப்பிவைத்துள்ளார். பாருங்களே உங்களுக்காக நான் எவ்வளவோ குரல் கொடுத்திருக்கிறேன் என்று.  


இவற்றையெல்லாம் நான் கூறவேண்டுமென நினைக்கவே இல்லை. ஆனால் இப்போது அவர் மேடையில் ஏறிக் கூறுகிறார் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் பெரஹெராக்களை நிறுத்திவிடுவதாக. அதனால் அதற்கு பின்னர் எங்களுடன் இணைந்து கொள்வதற்காக வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார். எனவே இவர்கள் மிகவும் கொச்சைத்தனமான குறைக்கூறல்களில் பிரவேசித்துள்ளார்கள். எனவே இந்த நாட்டின் நாகரீகம், இந்த நாட்டின் ஒழுக்கநெறிகள் கட்டியெழுப்பப்பட்டுள்ள விதத்தை நன்றாக உணர்ந்து கொண்ட அரசியல் இயக்கமே நாங்கள். ஒவ்வொரு மக்கள் சமுதாயத்திற்கும் தனக்கென தனித்துவமான அடையாளங்கள் இருக்கின்றன. 


தனித்துவமான கலாச்சார வைபவங்கள் இருக்கின்றன. தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு என்ன? அந்த தனித்துவமான கலாச்சார வைபவங்கள், சமய விழாக்கள், தனித்துவமான மதச் சம்பிரதாயங்கள் என்பவற்றை நன்றாக பாதுகாத்து, அவற்றுக்கு மதிப்பளித்து அவற்றை பாதுகாத்து வருங்கால சந்ததியினருக்கு ஒப்படைப்பதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும். ஆனால் அதற்கு எதிரான கருத்துக்களையே முன்வைத்து வருகிறார்கள்.  


அதைப்போலவே நீங்கள் கண்டிருப்பீர்கள் இரத்தினபுரி பக்கத்திற்கு போய் நாங்கள் வந்ததும் சுரங்க வேலைகளை நிறுத்தி விடுவதாக கூறினார்கள். நாங்கள் வருவது இந்த நாட்டில் இரத்தினக்கல் கைத்தொழிலை விருத்தி செய்து, எங்களுடைய ஒட்டுமொத்த கொள்கை பிரகடனத்திலும் அதிகமான பங்கினை எங்களுடைய கனிம வளங்களை விருத்தி செய்தல் பற்றி குறிப்பிட்டிருக்கிறோம்.  


எங்களுடைய இரத்தினக்கல் வளங்கள் இப்போது வீணாகிக்கொண்டிருக்கிறது. இரத்தினக்கல் கைத்தொழிலை எங்களால் விருத்தி செய்ய முடியும். இப்போது இரத்தினக்கற்களே இல்லாத ஹொங்கொங் போன்ற நகரங்கள் தான் இரத்தினக்கல் கேந்திர நிலையமாக மாறியுள்ளன. அதனை இலங்கைக்கு கொண்டுவருவது எங்களுடைய நோக்கமாகும். ஆனால் அதற்கு நோ்எதிரான கருத்துக்களையே அவர்கள் கூறிவருகிறார்கள். 


இப்போது புனைந்துள்ள புத்தம்புதிய கதை என்ன? சமூகத்தில் பீதிநிலையை விதைத்து வருகிறார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்தால் இப்படி நடக்கும், அப்படி நடக்கும் எனக்கூறுகிறார்கள். நாங்கள் தெளிவாகக்கூறுகிறோம் எமது நாட்டின் வரலாற்றில் அரசாங்கங்கள் மாறினால் எதிர் தரப்பினரை பழிவாங்குகின்ற வரலாறு தான் நிலவியது. உங்களுக்குத் தெரியும் 1977 இல் ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தை அமைத்ததும் பொலிசுக்கு விடுமுறை வழங்கினார். பொலிஸிலிருந்த இளைப்பாறிய டி.ஐ.ஜி இற்கு அது தெரியும்.  அவ்வாறு விடுமுறை வழங்கி வீடுகளை தீக்கிறையாக்க, மக்களை படுகொலை செய்ய இடமளித்தார். அவர்கள் அப்படித்தான் தோ்தல் வெற்றியை கொண்டாடினார்கள். பின்னர் வீடுகளைத் தாக்கி தீமூட்ட தொடங்கினார்கள். மற்றவர்கள் மீது உலை எண்ணையை ஊற்றித்தான் பெற்றோலியக்கூட்டுத்தாபனத்தில் தோ்தல் வெற்றியை கொண்டாடினார்கள். அந்த ஊழியர்களுக்கு வேலைக்கு வர இடமளிக்காமல் தான் இ.போ.ச. வெற்றியை கொண்டாடும். அந்த ஊழியர்களை கேற்றுக்கு உள்ளே வர இடமளிக்காமல் தான் துறைமுகத்திலுள்ளவர்கள் வெற்றியை கொண்டாடுவார்கள்.  


அவ்வாறான அசிங்கமான அரசியல் கலாச்சாரம் தான் எமது நாட்டில் நிலவியது. நாங்கள் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை அமைக்கிறோம் என்றால் என்ன?  எங்களுக்கு வாக்களித்த – எங்களுக்கு வாக்குகளை அளிக்காத எவருக்குமே இருக்கின்ற ஜனநாயக ரீதியான உரிமைக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். தமக்கு விருப்பமான அரசியலில் ஈடுபட, வாக்குகளை அளிக்க வாக்காளர்களுக்கு உரிமை உண்டு. ஆனால்  எங்களுக்கு அரசாங்கம் என்ற வகையில் அந்த அனைவரையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு உண்டு. நாங்கள் எங்களுடைய அங்கத்தவர்களிடம் கேட்டுக்கொள்வதும் இந்த நாட்டுக்கு அறிவிப்பதும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பின்னர் எந்த விதமான எதிர் தரப்பினருக்கும் எதிர் தரப்பினருக்கு வாக்களித்தவர்களுக்கும் ஒரு துளியேனும் பங்கமேற்படக்கூடிய வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்பது தான்.  அதற்கு தேசிய மக்கள் சக்தி இடமளிக்கமாட்டாது. எங்களுடைய  பொறுப்பு அது தான். 


அடுத்ததாக இவர்கள் குறைக்கூற தொடங்கியிருக்கிறார்கள் நாங்கள் தொழில் முயற்சிகளை பறிமுதல் செய்யப்போகிறோமென. நாங்கள் இவற்றை அளவிற்கு அதிகமாகவே கூறிவந்திருக்கிறோம். எனவே தற்போது அவர்களுடைய ஒட்டுமொத்த தோ்தல் இயக்கமும் குறைக்கூறல் என்கின்ற தொனிப்பொருளிலேயே இயங்கி வருகிறது. நான் கண்டேன் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார் ராஜபக்ஷ தப்பியோடிய வேளையில் அரசாங்க பொறுப்பினை ஏற்குமாறு எங்களுக்கு அழைப்பு விடுத்தார்களாம் நாங்கள் ஓடி ஒளிந்தோமென. ரணில் விக்கிரமசிங்க அவர்களே நீங்கள் ஒரு ஜனாதிபதி. ரணிலின் அளவிற்கு அதைக்கூறினால் பரவாயில்லை.  


ஆனால் ஜனாதிபதி பதவிக்கு அவ்வாறான விடயங்களை கூறுவது பொறுத்தமற்றது. நன்றாகவே தெரியும் தேசிய மக்கள் சக்திக்கு கோட்டாபயவோ மஹிந்தராஜபக்ஷவோ அரசாங்க பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கமாட்டார்கள். எங்களுக்கு அழைப்பு விடுக்கவுமில்லை. அதற்காக நாங்கள் ஆச்சர்யப்படபோவதுமில்லை. நீங்கள் நினைக்கிறீர்களாக ராஜபக்ஷாக்கள் ஒரு தாம்பாளத்தில் வைத்து எங்களுக்கு இதை ஒப்படைப்பார்கள் என்று. அப்படி ஒப்படைக்க மாட்டார்கள். மே மாதம் 12 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபயவிற்கு ஒரு கடிதத்தை எழுதினோம். இந்த நெருக்கடியை தீர்த்து வைக்க தேசிய மக்கள் சக்தி தயார்.  


எங்களுக்கு அதிகாரத்தை தாருங்கள் என்று. குறைந்தபட்சம் அந்த கடிதம் கிடைத்தது என்றுகூட எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. அடுத்ததாக பாராளுமன்றத்தில் நான் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட்டேன். எங்களுக்கு வாக்களித்திருக்கலாமே. அன்று பாராளுமன்றத்தில் நாங்கள் மூன்று போ் மாத்திரமே இருந்தோம். எங்களுக்கு சார்பாக பாராளுமன்றத்தில் எவருமே வாக்களிக்கவில்லை. அதற்கான காரணம் என்ன? அவர்கள் ஒருபோதுமே எங்களுக்கு அப்படி அதிகாரத்தை கொடுக்கமாட்டார்கள். ஏன்? அவர்களுக்கு தெரியும் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதென்பது ஊழலுக்கும் மோசடிக்குமான முற்றுப்புள்ளியென. அவர்களுக்கு தண்டனை வழங்குவதை நாங்கள் பிரதான காரணமாக கொண்டிருக்கிறோமென்று. எனவே ரணில் விக்கிரமசிங்கவும் அவருடைய கையாட்களும் தொடர்ச்சியாக நாங்கள் தப்பியோடினோமென கூறிவருகிறார்கள். ஆனால் நாங்கள் அப்படி தப்பியோடியவர்களல்ல. 


 தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த நாங்கள் ஒருபோதுமே பயந்து ஓடுபவர்களல்ல. இந்த சவாலை நாங்கள் ஏற்றுக்கொள்வதும் பயந்தோடுவதற்காக அல்ல. சீரழிந்துள்ள நாட்டை, பொருளாதாரம் சீரழிந்துள்ள விதத்தை, குற்றச் செயல்கள் மலிந்துள்ள விதத்தை, கடனை மீளச்செலுத்த முடியாதுள்ள விதத்தை கண்டு நாங்கள் தப்பியோடத்தான் வேண்டும். ஆனால் நாங்கள் அந்த பொறுப்பினை ஏற்றுக்கொள்ளத் தயார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு நான் கூற விரும்புவது நீங்கள் ரணிலாக நடந்து கொள்வதில் தவறில்லை. ஆனால் ஜனாதிபதி பதவியின் அந்தஸ்த்தினை விளங்கிக்கொண்டு நடக்கவேண்டும். அதைத்தான் கூறுகிறேன். எனவே உங்களுடைய தோ்தல் இயக்கத்தின் பிரதான தொனிப்பொருள் குறைக்கூறலாகும். 


வரலாற்றில் ஏற்பட்ட ஒரு சில படுகொலைகளுடன் அவர்கள் தோ்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவ்வாறு அந்த இயக்கத்தை தயாரித்துக் கொண்டிருப்பவர்கள் எங்களுக்கு தகவல்களை கூறிவருகிறார்கள்.  ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் கூறுவது முதலில் அவ்வாறு தயாரிப்பவர்களிடம் ஒரு வாக்கெடுப்பினை நடத்துமாறு. தேசிய மக்கள் சக்தி உண்மையை அடிப்படையாகக் கொண்டே தனது தோ்தல் இயக்கத்தை முன்னெடுத்து வருகிறது.  


இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்துடனாகும். இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான நோ்மை, விடய அறிவுபடைத்த, நாட்டை கட்டியெழுப்புவதற்கான தென்புடையவர்களாக இடையீடு செய்கின்ற ஒரு குழுவை உள்ளடக்கியதுதான் தேசிய மக்கள் சக்தி. அது தான் அதிகாரத்தை கோரி நிற்கிறது. எனவே ரணில் விக்கிரமசிங்க என்ன கூறினாலும் சஜித் பிரேமதாஸ என்ன கூறினாலும் இந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி மக்களிடம் கேட்டுக்கொள்வது நீங்கள் விழிப்புடன் இருங்கள்.  


தோன்றியுள்ள நிலைமையை மாற்றியமைப்பதற்கான மிகவும் பொறுத்தமான வாய்ப்பே உருவாகியிருக்கிறது. முதல் தடவையாக மக்களின் அரசாங்கமொன்றை அமைப்பதற்கான தருணம் உதயமாகியிருக்கிறது. இந்த நிலைமையை கைநழுவிச் செல்ல இடமளிக்காமல் நாம் அனைவரும் ஒன்று சேருவோமென எமது நாட்டின் வாக்களர்களுக்கும் புதுப் பிரஜைகளுக்கும் அழைப்புவிடுக்கிறோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »