தன்னையும் தனது குழுவில் உள்ளவர்களையும்
வைன் ஸ்டோர்களையும், மதுபான சாலை அனுமதி பத்திரங்களையும், சலுகைகளையும் வரப்பிரசாதனங்களையும் காட்டி விலைக்கு வாங்க முடியாது.பணத்துக்கும் பதவிகளுக்கும் எனது சுய கௌரவத்தை காட்டி கொடுத்து ஏலத்தில் செல்வதும் இல்லை. தான் இந்த நாட்டை விற்கவோ, ஏலத்தில் விடவோ, இந்த மக்களை காட்டிக் கொடுக்கவோ ஒருபோதும் முற்படுவதில்லை. எனவே என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் எட்டாவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கட்டுநாயக்க நகரில் புதன்கிழமை (21) மாலை இடம்பெற்றது. இதில், ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் போலவே அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொச்சிக்கடை, கட்டுவாப்பிட்டிய, மட்டக்களப்பு மற்றும் பல ஹோட்டல்களின் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பில் இதுவரையும் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை. இதற்கு தலைமைத்துவம் வழங்கியவர்கள் தொடர்பில் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
அதன் உண்மை தன்மையை வெளிப்படுத்துவதாக தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களையும் கத்தோலிக்க சமூகத்தையும் ஏமாற்றியுள்ளார்.
அதற்குப் பின் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அடித்தளத்தில் பயணித்து இந்த தாக்குதலின் உண்மைத்தன்மை வெளிப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
செப்டம்பர் 21 ஆம் திகதி வெற்றிக்குப் பின்னர் இந்தத் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உண்மையை வெளிக் கொணர்வதற்காக உள்நாட்டு வெளிநாட்டு அங்கத்தவர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமித்து, அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து, அதனுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன்நிறுத்தி, அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கக் கூடிய அதிகபட்ச தண்டனையை பெற்றுக் கொடுப்பதாக அண்மையில் கார்டினல் அவர்களை சந்தித்தபோது தெரிவித்ததாக இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இந்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அதனை புனரமைப்பு செய்வதற்கு தாம் உள்ளிட்ட குழுவினரே செயற்பட்டுள்ளோம்.
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வாழ்வாதார வழிகளை அமைத்துக் கொடுத்தாலும், எம்மை விட்டுப் போன உயிர்களை மீளப்பெற முடியாது.
இந்த தேவாலயத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொண்ட போது அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் அதனைத் தடுத்தார்கள். எதனைச் செய்தாலும் அந்தப் பெருமதியான உயிர்களை மீட்டெடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாம் திருடர்களையும் தீவிரவாதிகளையும் பாதுகாப்பதில்லை. ரணசிங்க பிரேமதாசவின் நாமத்தைக் கொண்டு இதன் அந்தரங்கத்தை மூலக்கூறு வரை ஆராய்ந்து, உண்மையை வெளிப்படுத்தி, இதனோடு தொடர்புடைய அனைவருக்கும் தண்டனையைப் பெற்றுக் கொடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டி காட்டினார்.
தொழில் வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்காக ஒரு மில்லியன் தொழில் முனைவோர்களை உருவாக்கி, அவர்களுக்கு தமக்கான வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்போம்.
அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இளைஞர் அபிவிருத்தி மத்திய நிலையம் ஒன்றை உருவாக்குவோம். தொழில் அமைச்சின் கீழ் இளைஞர் படையணியை உருவாக்கி அந்த மத்திய நிலையத்தோடு வேலை திட்டத்தை முன்னெடுத்து, அதனை செயல்படுத்துவோம்.
சிறந்த தொழில்நுட்ப அறிவையும், நல்ல ஞானத்தையும் வழங்கி சிறந்த பிரஜைகள் உள்ள சமூகத்தையும் உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களையும் தொழில் முனைவோர்களையும் கட்டியெழுப்புவதற்கு புதிய வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படும். வீழ்ச்சி அடைந்துள்ள இந்த வர்த்தகங்களை கட்டியெழுப்ப மூலதனங்கள் வழங்கப்படும். வறுமையை ஒழிக்கும் நோக்கில் புதிய வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படும். ஊழல் மோசடிகள் இல்லாது செய்து, திருட்டையும் ஒழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார.
52 நாள் காலத்தின் போதும் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தின் போதும் பிரதமர் பதவியை பொறுப்பேற்றுமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், அது ஜனநாயக விரோத செயற்பாடு என்பதால் அதனைச் செய்யவில்லை.
அவ்வாறு செய்திருந்தால் திருடர்களை பாதுகாத்து நாட்டை வங்குரோத்து அடையச் செய்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மை தன்மையை மறைத்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி இருந்திருக்கும். அதனை இட்டு இந்த சந்தர்ப்பத்தில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். மக்களின் ஆசீர்வாதம் இன்றி நான் அதிகாரத்தை பொறுப்பேற்பதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
நான் அதிகாரத்திற்கு வந்த பிறகு நாட்டை வங்கரோத்து அடையச் செய்து, திருடிய பணத்தையும் வளங்களையும் மீள பெற்று அவற்றை நாட்டின் நன்மைக்காக பயன்படுத்துவேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.