இலங்கையின் வான் பரப்பில் தேர்தல் மேகங்கள் முகிழ்த்தெழத் தொடங்கி இருக்கின்றன. வழமை போல கட்சித் தாவல்கள், தாவல்களுக்கான நியாயப்படுத்துதல்கள் என்று அரசியல் களம் மெதுமெதுவாகச் சூடாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த முறை கட்சி அபிப்பிராயம் என்ற கட்டமைப்பைக் கிழித்துக் கொண்டு தனிவாக்காளனின் வாக்குகள் யாருக்கு என்பது ஒரு அறியமுடியாத சூனியமாக இருப்பதனால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் யார் என்பதில் பாரிய குழப்பமும் சந்தேகமும் தொக்கி நிற்கின்றன.
சிங்களமும், தமிழ்த் தேசியமும் தமக்கு என்ன தேவை என்பதில் தெளிவாக இருக்கின்றது. இணைந்த வடகிழக்கில் தமக்கான ஒரு சமஷ்டி என்ற கோஷத்தில் தமிழ்த் தேசியம் நகர்கிறது. நாட்டை வீழ்ச்சிப் பாதையில் இருந்து காத்து ஒரு ஆரோக்கியமான பொருளாதாரப் பலத்தை வாக்குறுதியளிக்கும் தலைமையை சிங்களச் சமுகம் எதிர்பார்க்கிறது.
முஸ்லிம் சமுகம் எதை நோக்கி நகர்கிறது?
எங்கள் அரசியல் அபிலாசைகள் என்ன? எங்களுக்கு என்ன தேவை? நாம் எதை நோக்கி நகர்கிறோம். இவை ஒன்றும் எங்களின் கரிசனையில் இல்லை.
எந்த நிபந்தனையையும் வெளியே சொல்லாமல் முஸ்லிம் காங்கிறஸ் வழமை போல சஜித் அணியை ஆதரிக்கிறது. றவுப் ஹக்கீம் அவர்களுக்கு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்ற பெற வேண்டுமென்றால் கண்டியில் அவருக்கு இருக்கும் சிங்கள வாக்குகள் சஜித்தின் தரப்பினது வாக்குகள். அதனால் அவர் சஜித்தை ஆதரிக்கிறார். ஒரு தனி மனிதனின் அரசியல் வெற்றிக்காக முழுக் கிழக்கின் அரசியல் அபிலாசைகள் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன. அதைக் கேட்பாரும் யாரும் இல்லை. பார்ப்பாரும் எவரும் இல்லை. எதற்காக சஜித்தை ஆதரிக்கிறீர்கள்? அதிலிருந்து கிழக்கிலங்கையின் முஸ்லிம்கள் அடையப்போகும் நன்மை என்ன? இதை கிழக்கு மக்களும் கேட்பதாய் இல்லை. ஒரு ஆதவன் பாட்டுக்கும் நாரே தக்பீருக்கும் உசுப்பாகி வாக்கும் போடும் கையறு நிலையில் எமது முஸ்லிம் வாக்காளர்கள் நிற்கிறார்கள்.
சரி றிஷாட் பதியுதீன் என்ன செய்கிறார்? மக்கள் அபிப்பிராயத்தைக் கேட்பதாக ஒரு நாடகத்தை ஆடி சஜித்திடம் போய் ஒப்பந்தம் செய்து ஒட்டிக் கொண்டிருக்கிறார். இதைப் புரிவதற்கு எந்த மந்திரமும் தேவை இல்லை. ஹக்கீம் எவ்வழியோ ரிஷாடும் அவ்வழி. ஒப்பந்தத்தில் புத்தளம் வைத்தியசாலையைத் தரமுயர்த்தக் கேட்டிருக்கிறாராம். அவருக்கு அரசியலில் பேரம் பேசுவது என்றால் என்ன என்று வகுப்பு எடுக்க வேண்டும். கிழக்கின் வாக்குகளைக் கொண்டு சஜித்திடம் கொடுப்பதற்கு ஏன் புத்தள வைத்தியசாலையை தரமுயர்த்த வேண்டும் என்பது கிழக்கானின் கேள்வி. இத்தனை வாக்குகளையும் கொண்டு தாரை வார்ப்பதற்கு கிழக்கு மக்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்ற கேள்விக்கு ரிஷாடிடமும் பதில் இல்லை.
அதாவுல்லாஹ் ஒரு அற்புதப்படைப்பு. 20 வருடங்களுக்கு மேலாக ரணில் எதிர்ப்பு அரசியலை கிழக்கில் செய்தவர். ரணிலின் வாகனத்தில் தான் ஏறப்போவதில்லை என்ற அஷ்ரபின் வஸியத்தைப் பின்பற்றுவதாக காது கிழியக் கத்தியவர். இன்று ரணிலோடு நிற்கிறார். மருந்து கசப்பு என்றாலும் குடித்துத்தான் ஆக வேண்டும் என்ற ஒரு உதாரணத்தோடு அரசியல் மேடைகளில் ஏறுவார். ஏளனப்படுவார். அவரின் அகசாய ரசிகர்கள் கூட ரணிலை ஏசிய வீடியோக்களை வைத்திருக்கிறார்கள். வீடியோக் கொதம். நல்லதொரு நகைச் சுவைக் காலம் ஆரம்பமாகியிருக்கிறது.
ஒரு கொள்கையில் அரசியல் தலைமையும் அதன் பிரதி நிதிகளும் ஒன்று பட முடியாத பிரிவினை அரசியல் கட்சிகளுக்குள் நிலவுகின்றது. நசீர் அஹமட் அவர்களை இல்லாமல் செய்து எம்.பி ஆன அலி ஸாஹிர் மௌலானா ரணிலோடு சேர்ந்து கொண்டார். இன்னும் யார் யார் போகப் போகிறார்கள் என்று தெரியாது. முஷர்போடு இரண்டு எம்பிகள் ரணீலோடு சேர்ந்து விட்டார்கள். ரிஷாட் மட்டும் சஜித்துக்கு.
இதற்கெல்லாம் காரணம் அவரவர் அவரவருக்குத் தேவையானதை சிங்களத் தலைமைகளிடம் தனியே கேட்பது. அது சமுகத்தின் தேவை அல்ல. அவரவரின் அடுத்த தேர்தலுக்கான தேவை.
வடகிழக்கு இணைந்தால் கிழக்கு முஸ்லிம்களுக்கு என்ன நடக்கும்? தமிழ்த்தரப்பு கேட்கும் சமஷ்டியால் நாம் எதிர்கொள்ளப் போகும் பிரச்சினைகள் என்ன? இதை யாரும் பேசுவதாய் இல்லை. நாளை எமது குழந்தைகளுக்கு இந்த நாட்டில் கொடுக்கப்படவிருக்கும் அரசியல் அடையாளம் என்ன?
ஆக, கிழக்கு முஸ்லிம் அரசியல் தலைமகள் கிழக்கு முஸ்லிம்களை படு குழியில் தள்ளிக் கொண்டு செல்கிறது. நாம் இன்னமும் சஜித்திலும் ரணிலிலும் யார் நல்லவர்கள் என்ற கதையில் இருக்கிறோம்.
வடக்கில் பல்கலைக் கழகத்தில் சமஷ்டிக்கான அரசியல் சிந்தாத்தத்தை எழுதும் பணிக்கு தனது சைக்கிளைத் வெளியே எடுக்கிறார் சோமசுந்தரம்.
கிழக்கில் அலுமாரிக்குள் மடித்து வைத்த அந்தச் சால்வையை தூசி தட்டி தோளில் போட்டுக் கொள்கிறார் முஸ்தபா. சைக்கிளைக் கடற்கரை நோக்கி தள்ளுகிறார்.
தூரத்தே கடற்கரையில் ஒலிபெருக்கியில் ஆதவன் பாட்டு காற்றில் கலந்து காதில் கேட்கிறது. முஸ்தபா சைக்கிளை வேகமாக மிதிக்கிறார்.
தலைவர் வருகிறாராம்.
எங்கே செல்கின்றது எமது பாதை..?