இதுவரை நாட்டில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஏழ்மையினாலும் வறுமையினாலும் பிடிக்கப்பட்டிருப்பதால் அழுத்தங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றார்கள். மொத்த நாட்டு மக்களையும் வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் மனிதாபிமான செயற்பாட்டிற்கு ஐக்கிய மக்கள் சக்தி பிரவேசித்திருக்கிறது.
இதுவரை காலமும் அரச உத்தியோகத்தர்களை நாட்டுக்கு நஷ்டமானவர்களாகவும் சுமையானவர்களாகவும் இந்த அரசாங்கம் கருதி வந்தாலும், தற்பொழுது இந்த அரசாங்கத்திற்கு அரச உத்தியோகத்தர்கள் முக்கியமானவர்களாக மாறி இருக்கிறார்கள்.
இதற்குக் காரணம் சந்தர்ப்பவாதமே ஆகும். தமது இடத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக இனிப்பு பண்ட அரசியலை மேற்கொண்டு, அரச உத்தியோகத்தர்களை ஏமாற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரச சேவையால் நாட்டுக்கு நட்டம் ஏற்படுவதாக குறிப்பிட்ட இவர்கள், பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வேலை திட்டங்களை முன்னெடுக்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி பொய் வாக்குறுதிகளை வழங்காது. சொல்வதையே செய்கின்றது. பொய்யான வாக்குறுதிகளுக்கு பதிலாக சரியான திட்டங்களை முன்வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் யுகம் ஆரம்பிக்கப்பட்டவுடன் அவை நிறைவேற்றப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் வாழ்க்கைச் செலவு என்பனவற்றில் பொருத்தமான திருத்தங்களை மேற்கொள்ள விசேடமான ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு, இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய செயல்படுத்துவோம்.
அரச ஊழியர்களுக்கு 2025 ஜனவரி முதல் சம்பளத்தை 24% ஆக அதிகரித்து அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற 17,800 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 25,000 வரை அதிகரிப்போம். அனைத்து அரச ஊழியர்களின் குறைந்த பட்ச அடிப்படைச் சம்பளம் 57,500 ரூபாவாக அதிகரிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பத்தாவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (23) பிற்பகல் வரகாபொல நகரில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் போலவே அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இந்த மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்பொழுது காணப்படுகின்ற வரிக் கொள்கையினால் அரச ஊழியர்கள் உட்பட தொழிலாளர் வர்க்கமே பாரிய அழுத்தங்களுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். தற்பொழுது அரச ஊழியர்களின் பெரும்பாலானவர்களின் சம்பளத்திற்கு அறவிடப்படுகின்ற வரி 6 - 36% வரையிலான உழைக்கும் போது செலுத்தும் வரி வீதம் 24% வரை குறைக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
🟩 சிறந்த அரச சேவைக்காக பல சலுகைகள்.
அரச ஊழியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகள் மாத்திரம் வழங்கப்படுவதோடு மேலதிக வருமானங்கள் இல்லை. சம்பளத்திற்கான வரி அளவிடப்படுகின்ற போது அவர்களால் சிறந்த அரச சேவையை வழங்கக்கூடிய மனநிலை கிடைப்பதில்லை. அதனால் நாம் இந்த சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு மேலதிகமாக அரச சேவையை நவீன மயமாக்கி e-ஸ்ரீலங்கா, e-கவர்ன்மென்ட் வேலை திட்டங்களின் ஊடாக சிறந்த அரச நிர்வாகத்தையும், சிறந்த பயிற்சிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
அரச ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கல்வியும் பாதுகாப்பும் வழங்கப்படும். இவை வாக்குறுதிகள் அல்ல. நாட்டை கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் ஆகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 நாட்டையும் அதிகாரத்தையும் கைப்பற்ற விரும்புகின்ற மத நம்பிக்கையற்றவர் மத உரிமைக்கும் அழுத்தம் விடுகின்றார்.
புத்தசாசன அமைச்சின் ஊடாக கிராமங்களிலும் சந்திகளிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளை கணக்கெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றே இது நடந்து வருகிறது. இதே கணக்கடுப்பு ஏனைய இனங்களுக்கும் வரலாம். ஏனைய இனங்களில் மதஸ்தானங்களை கணக்கெடுக்கும் நிலை ஏற்படலாம். மதசார்பற்ற சமுதாயம் ஒன்றை உருவாக்கவே முயற்சிக்கின்றார்கள். இன்று பௌத்த தர்மத்திற்கே இவ்வாறான ஆணைகளை பிறப்பிக்கின்றனர். நாளை ஏனைய மதங்களுக்கு அழுத்தங்களை கொடுக்கலாம். மக்களின் மத உரிமையை இல்லாமல் செய்கின்ற முயற்சி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அத்தோடு, தனது தந்தை புத்த சாசன அமைச்சையும் ஏனைய மதங்களுக்கான தனித் தனி அமைச்சுக்களையும் உருவாக்கினார். இன்று தற்போதைய அரசாங்கமும் ஆட்சி அதிகாரத்தை பெற முற்படுகின்ற மதசார்பற்றவர்கள் மதங்களைப் பின்பற்றும் உரிமையை இல்லாத செய்ய முற்படுகின்றனர். இந்த வெட்கங்கெட்ட செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவிப்பதாக தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கு உரிமை உண்டு. இந்த கணக்கெடுப்பை மேற்கொண்டு மதச்சார்ப்பற்ற நிலையை தோற்றுவிக்க நடவடிக்கை எடுத்து வரும் அரச அதிகாரிகளுக்கு எதிராக எமது ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.