காஸாவில் இடம்பெறும் யுத்த நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின்படி ஸ்தாபிக்கப்பட்ட “காஸா சிறுவர் நிதியத்திற்கு” மேலும் ஐந்து இலட்சத்து தொண்ணூறு ஆயிரம் (590,000/-) அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளன.
குறித்த தொகை நேற்று 07ம் திகதி ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவினால் ஐ.நா சபையின் பாலஸ்தீனத்திற்காக நிதியமான UNRWA வின் அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்களை இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச். ஸைத் (H.E.Dr.Zuhair M H Dar Zaid) மற்றும், ஐக்கிய நாடுகள் சபைக்கான நிவாரணப் பணி முகவர் நிறுவனத்தின் (UNRWA) இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோட்டா (Azusa Kubota) ஆகியோரிடம் ஜனாதிபதி கையளித்தார்.
யுத்த நிலைமை காரணமாக காஸாவில் சிக்கியுள்ள சுமார் ஒரு மில்லியன் சிறுவர்களின் அத்தியாவசிய செலவுகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவது தொடர்பில் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 04 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
கடந்த இப்தார் நிகழ்வுகளை நடாத்துவதற்காக அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களால் ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிதியத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அந்த நிதியத்திற்கு கிடைத்த ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதற்கட்டமாக 04-01-2024 அன்று பலஸ்தீன மக்களுக்காக UNRWA விடம் வழங்கப்பட்டன.
மேலும், ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, வர்த்தக நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இந்த நிதியத்துடன் கைகோர்த்து, நிதியத்திற்கு பங்களிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டதோடு அந்தக் காலக்கெடு 2024 ஜூலை 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. இதன்படி, 2024 ஜூலை 31 ஆம் திகதி வரை நிதியத்திற்குக் கிடைத்த ஐந்து இலட்சம் (590,000) அமெரிக்க டொலர் தொகை நேற்று கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பதில் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, காஸா சிறுவர் நிதியத்துடன் கைகோர்த்த அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி அலுவலகம் தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.