ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு முடிவடைந்து 21 நாட்களுக்குள் தேர்தல் செலவினங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்காத மற்றும் போலியான தகவல்களை முன்வைக்கும் வேட்பாளர்களின் குடியுரிமை மூன்று ஆண்டுகளுக்கு இரத்து செய்யப்படும். தேர்தல் செலவினங்கள் ஒழுங்குப்படுத்தல் சட்டத்துக்கமைய அனைத்து வேட்பாளர்களும் செயற்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேர்தல் பிரச்சார செலவினங்கள் தொடர்பான சட்டம் 1946 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.தேர்தல் சட்டத்துக்கு அமைய செயற்படாதவர்களின் பதவி நிலைகளும் நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஊடாக இரத்துச் செய்யப்பட்ட வரலாற்று பதிவுகளும் காணப்படுகின்றன.
தேர்தல் கட்டமைப்பில் விருப்பு வாக்கு முறைமையை அறிமுகப்படுத்தப்பட்டவுடன் நிதியை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் செயற்பாடுகளை தீர்மானிக்கும் செயற்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. வாக்காளர்களும் தமக்கு என்ன கிடைக்கும் என்பதை கருத்திற் கொண்டு தேர்தலை தீர்மானக்கும் நிலை தோற்றம் பெற்றது.
தேர்தல் காலத்தில் நிதி பரிமாற்றம் தீவிரமடைந்ததன் பின்னர் அரசியல்வாதிகளுக்கும் வாக்காளர்களுக்கும் இடையிலான சமூக ஒப்பந்தம் பலவீனமடைந்து. வியாபார நிலைமை தோற்றம் பெற்றுள்ளது. வேட்பாளருக்கும் வாக்காளருக்கும் இடையிலான உறவு வியாபாரிக்கும், நுகர்வோருக்கும் இடையிலான உறவாக மாற்றமடைந்துள்ளமை கவலைக்குரியது.
இவ்வாறான பின்னணியில் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரத்துக்காக செலவு செய்ய வேண்டிய நிதி தொடர்பில் ஒரு வரையறையை கொண்டு வர வேண்டும் என்பதற்காக 2010 ஆம் ஆண்டு தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தல் சட்டம் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டு பாரிய போராட்டத்துக்கு மத்தியில் 2023 ஆம் ஆண்டு தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தல் சட்டம் இயற்றப்பட்டது.
2023 ஆம் ஆண்டு நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டத்தை செயற்படுத்த எதிர்பார்த்திருந்தோம். இருப்பினும் நிதி நெருக்கடி காரணமாக தேர்தலை நடத்த முடியவில்லை. உள்ளுராட்சிமன்றத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவது குறித்து கலந்துரையாடியுள்ளோம்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ளன. தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் சட்டத்துக்கு அமைய வாக்காளர் ஒருவருக்கு வேட்பாளர் ஒருவர் பிரச்சார செலவுக்காக 109 ரூபாவை செலவழிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே அனைத்து வேட்பாளர்களும் இந்த தொகைக்கு உட்பட்ட வகையில் செயற்பட வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்து 21 நாட்களுக்குள் 38 வேட்பாளர்களும் தமது தேர்தல் பிரச்சார செலவினங்கள் தொடர்பிலான உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களை சமர்ப்பிக்காத மற்றும் போலியான ஆவணங்களை சமர்ப்பிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மூன்று ஆண்டுகள் தேர்தலில் வாக்களிப்பதற்கும்,வாக்கு கோருவதற்கும் தடை விதிக்கப்படும் அதனுடன் குடியுரிமையை இழக்க நேரிடும்.ஆகவே சகல வேட்பாளர்களும் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் தரப்பினரும் தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்துக்கு அமைய செயற்பட வேண்டும் என்றார்.