Our Feeds


Tuesday, August 20, 2024

Sri Lanka

2024 ஜனாதிபதித் தேர்தல் சுவாரஸ்யங்கள்!


ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தல்-2024இற்கான எல்லா ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் 39 வேட்பாளர் கள் தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

ஒரு சவால்மிக்க இந்த ஜனாதிபதித் தேர்தலாக இது மாற்றமடைந்துள்ள நிலையில், வரலாற்றில் இல்லாதளவுக்கு முதன்முறையாக 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.

கடந்த 20219ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். அதில் பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 52.25% வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 41.99% வாக்குகளைப் பெற்றார்.


2024 தேர்தலில் காணப்படும் பாரதூரமான விடயம் என்ன?

ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், வாக்குச்சீட்டு 27 அங்குல நீளமும் 5 அங்குல அகலமும் கொண்டதாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒற்றை நெடுவரிசையா அல்லது இரட்டை நெடுவரிசையா என்பதைத் தேர்தல் ஆணைக்குழு மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என்று அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் ஆதாரம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், இரட்டை நெடுவரிசை வாக்குச்சீட்டாக இருந்தால், வாக்குச்சீட்டு 13.5 அங்குல நீளமும் அகலமும் கொண்டதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட மிக நீண்ட வாக்குச்சீட்டு இதுவாகும். பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை கடந்த காலத்தில் எதிர்பார்த்ததை விட நீண்ட வாக்குச்சீட்டாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

நீண்ட வாக்குச்சீட்டுக்கான பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பொருட்களை அச்சிடுவதற்கு அரசாங்கம் அதிகச் செலவைச் சந்திக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்குச்சீட்டு சுமார் 25 அங்குல நீளமாக இருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.


தற்போதைய ஜனாதிபதியின் நிலைப்பாடு!

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகின்றார். அப்போதைய காலத்தில் இளம் வயதில் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய ஒரே பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைக்கொண்டவர்.

அதிகமான தடவைகள் பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கவுக்கு 2024 ஜனாதிபதித் தேர்தல் மிகவும் சவால்மிக்கதாக காணப்படுகின்றது. காரணம், மிகவும் வலுவான எதிர்த்தரப்பினருக்கு மத்தியில் இவரது வெற்றி எவ்வாறு பிரதிபலிக்கப்படும் எனவும் சமூக ஆர்வலர்களால் உற்றுநோக்கப்படுகின்றது.

மேலும், கடந்த 3 ஜனாதிபதித் தேர்தலிகளிலும் அவர் போட்டியிடாத பட்சத்தில் 2022ஆம் ஆண்டு அரகலய போராட்டம் இலங்கையில் வலுப்பெற்றிருந்தது. அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை அநாதரவாக விட்டுச்சென்ற நிலையில், இலங்கையின் இரண்டாவது இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார்.

இலங்கை வரலாற்றில் ரணசிங்க பிரேமதாச உயிரிழந்த காலப்பகுதியில் டி.பி.ஜயசிங்க முதலாவது இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வாழ்க்கையில் ஒரு சரித்திர வரலாற்றை ஏற்படுத்தும் தேர்தல் களமாக இது அமையுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


2024 ஜனாதிபதித் தேர்தலிலுள்ள சுவாரஸ்யம் என்ன?

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியாக இருந்த இரு தலைவர்களின் புதல்வர்கள் இந்த 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்.

அதாவது, ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இதனால் இந்தத் தேர்தல் அனைவர் மத்தியிலும் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிக சிறுபாண்மையினர் - மூன்று தமிழ் வேட்பாளர்கள் போட்டி

வடக்கு - கிழக்கு மாகாண மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகாராஜ், அருணலு மக்கள் சார்பில் கிருஷான், இரு முஸ்லிம் வேட்பாளர்கள் முகம்மது இலியாஸ், அபூபக்கர் இன்பாஸ் என அதிக சிறுபான்மையினர் போட்டியிடும் ஒரே தேர்தலாக இது பார்க்கப்படுகின்றது.

அதிக எண்ணிக்கையிலான தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஒருவரான சிறிதுங்க ஜயசூரிய இம்முறையும் இதில் போட்டியிடுகின்றார்.

நுவன் சஞ்சீவ போபகே அரகலயவைப் பிரதிநிதித்துவப்படுத்தி களமிறக்கப்பட்டுள்ளவர். இவருக்கும் இந்தத் தேர்தல் மிக முக்கிய சவாலாக இருக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பெண் பிரதிநிதித்துவம் இல்லை?

1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போட்டியிட்டு வெற்றிபெற்றியிருந்தார்.

2005ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு பெண் வேட்பாளரும் போட்டியிடவில்லை.

நாட்டின் சனத்தொகையில் 52 வீதமான பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், அதில் 5.8 வீதமானவர்களே பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிக்கின்றனர்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் வழங்கப் படாமை மிகவும் வருத்தமளிக்கும் விடய மென சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6 சதவீதத்துக்கும் குறைவாகவே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெண் பிரதிநிதித்துவம் இல்லாத ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் துடுப்பு இல்லாத படகு போன்றதென அமைச்சர் கீதா குமாரசிங்க மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »