மோட்டார் சைக்கிளை நிறுத்தாத காரணத்தினால் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரை களுத்துறை - பயாகல பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த மாணவன் கடந்த 7ஆம் திகதி தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள கடையொன்றுக்கு சென்றுள்ளதாகவும் பின்னர் அமர்ந்து சென்ற அவரது நண்பர் தலைக்கவசம் அணியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது பயாகல பொலிஸ் போக்குவரத்து பிரிவின் நடமாடும் அதிகாரிகள் இருவர் அவர்களை துரத்திச் சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர்களை திட்டியுள்ளனர்.
அப்போது பாடசாலை மாணவன் மோட்டார் சைக்கிளை மீண்டும் இயக்கி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார்.
அவர்களை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற மாணவனை கன்னத்தில் அரைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளை செலுத்திய மாணவனையும் சரமாரியாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான பாடசாலை மாணவர் சிகிச்சைக்காக களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பயாகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.