ஓய்வூதியர்கள் மற்றும் முதியோர்களுக்கான விசேட 15வீத வட்டி வீதத்தை பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கம் பல தடவைகள் தெரிவித்திருந்தபோதும் இதுவரை அதனை வழங்க தவறி இருக்கிறது. அதனால் அரசாங்கம் இவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஓய்வூதியர்கள் மற்றும் முதியோர்களுக்கு வழங்கப்பட்டுவந்த விசேட 15வீத வட்டி வீதத்தை குறைத்து அதனை 7.15வீதம் வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது. 2016இல் இருந்து 2020வரை இதனை செயற்படுத்துவதாகவும் அரசாங்கம் தெரிவித்திருந்தது. இருந்தபோதும் இந்த வட்டி வீதத்தை மீண்டும் 15வீதமாக அதிகரி்த்துக்கொடுக்க அரசாங்கம் தவறி இருக்கிறது.
முதியோர்கள் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் வங்கிகளில் சேமிக்கும் பணத்துக்கு கிடைக்கப்பெறும் வட்டியை கொண்டே தங்களின் வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர். அவர்களின் இந்த 15வீத வட்டி வீதத்தை வழங்குவதாக அரசாங்கம் இந்த சபையில் பல தடவைகள் தெரிவித்திருக்கிறது. ஆனால் செயற்படுத்துவதில்லை. அமைச்சர் ஒருவர் இந்த சபையில் பொறுப்புடன் ஒரு விடயத்தை தெரிவித்தால், அதனை செயற்படுத்த வேண்டும்.
அத்துடன் கோத்தாபய ராஜபக்ஷ் அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த பின்னர் முதலாவதாக எடுத்த தீர்மானம், ஒரு இலட்சத்தி 21ஆயிரம் ஓய்வூதியர்களின் வட்டி வீதத்தை 2016இல் இருந்து 2020வரை குறைப்பதாகும். இந்த ஓய்வூதியர்களில் சிலர் தற்போது உயிருடன் இல்லை.
அதேபோன்று கிராம சேவகர்களின் சேவை பிரமாணக்குறிப்பு மற்றும் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்த சபையில் தொடர்ந்து தெரிவித்து வந்தேன். கிராம சேவை அதிகாரிகளுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்த சேவை பிரமாணக்குறிப்புக்கு பதிலாக அமைச்சருக்கு, அதிகாரிகளுக்கு தேவையான சேவை பிரமாணக்குறிப்பையே அனுமதித்துக்கொள்ள அனுப்பப்பட்டிருக்கிறது.
அமைச்சர்கள் இந்த சபையில் அனைத்துக்கும் இணக்கம் தெரிவிக்கின்றனர். ஆனால் அவற்றை செயற்படுத்துவதில்லை. அதனால் ஓய்வூதியர்கள் மற்றும் முதியோர்களுக்கான விசேட 15வீத வட்டியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.