Our Feeds


Wednesday, August 7, 2024

Zameera

சம்பள விவகாரம் 12ஆம் திகதி பேச்சு - நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பேன்


 பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் குறித்து எதிர்வரும் 12ஆம் திகதி சம்பள நிர்ணய சபையுடன் கலந்துரையாடவுள்ளேன். நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பேன். வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவேன்’’ இ.தொ.கா.பொதுச் செயலரும் நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு, வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை(06) இடம்பெற்ற மாத்தறை நில்வலா கங்கை அண்மித்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள உவர்நீர் தடுப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,


பெருந்தோட்ட மக்களுக்கு 1,700ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் இன்றும் உறுதியாக உள்ளது. வர்த்தமானி வெளியிட்டதன் பின்னர் பெருந்தோட்ட கம்பனிகள் வர்த்தமானிக்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்கு சென்று இடைக்கால தடையுத்தரவு பெற்றுக்கொண்டார்கள். இதன் பின்னர் நாங்கள் வர்த்தமானியை வாபஸ் பெற்றோம். இதனை தொடர்ந்து தோட்டக் கம்பனிகள் வழக்கை வாபஸ் பெற்றன.


எதிர்வரும் 12ஆம் திகதி சம்பள நிர்ணய சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். நியாயமான சம்பளத்தை நிச்சயம் பெற்றுக்கொடுப்பேன். வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவேன். 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பேன் என்று குறிப்பிட்ட போது எனக்கு அரசியல் அனுபவம் போதாது என்று என்னை விமர்சித்தார்கள். ஆனால் ஆறு மாத காலத்துக்குள் 1000 ரூபாவை பெற்றுக்கொடுத்தேன். வழங்கிய வாக்குறுதியை நான் நிறைவேற்றுவேன். சம்பள விவகாரத்தை கொண்டு நான் அரசியல் செய்யவில்லை.


இதேவேளை, மாத்தறை நில்வலா கங்கை அண்மித்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள உவர்நீர் தடுப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை தொடர்பில் உரையாற்றுகையில், ஒன்றரை இலட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார். ஆனால் இந்த திட்டத்தால் 08 இலட்சம் பேர் பயனடைந்துள்ளார்கள் என்பதை எவரும் குறிப்பிடுவதில்லை.


மொத்த சனத்தொகையில் 60 சதவீதமானோர் மாத்திரமே தூய்மையான குடிநீரை பெறுகிறார்கள். இந்த திட்டத்தை கைவிட்டால் பலர் பாதிக்கப்படுவார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சகல தரப்பினரது ஒத்துழைப்பையும் எதிர்பார்த்துள்ளோம். மூன்று பல்கலைக்கழகங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். குடிநீர் விவகாரத்தில் அரசியல் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »