Our Feeds


Sunday, August 11, 2024

Zameera

காசாவில் பாடசாலை மீது தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் பலி


 காசாவில் அகதிகள் புகலிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானதாக பாலஸ்தீன செய்தி ஊடகக் குறிப்பு தெரிவிக்கின்றது.

கிழக்கு காசாவில் பாடசாலை ஒன்று அகதிகள் புகலிடமாக பயன்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு மக்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஹமாஸ் மருத்துவப் பிரிவு அறிக்கையில், “அகதிகளாக தங்கியிருந்த மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலரும் உயிரிழந்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வாரம் காசாவில் 4 பாடசாலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஆகஸ்ட் 4 ஆம் திகதி இஸ்ரேலிய தாக்குதலில் அகதிகள் புகலிடமாக செயல்பட்ட 2 பள்ளிகள் தகர்க்கப்பட்டன. இதில் 30 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். அதற்கு முந்தைய தினம் காசா நகரின் ஹமாமா பள்ளியில் நடந்த தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

ஆகஸ்ட் 1 ஆம் திகதி தலால் அல் முக்ராபி பள்ளியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இன்று இஸ்ரேல் மீண்டும் அகதிகள் தஞ்சம் புகுந்திருந்த பள்ளியை குறிவைத்து தாக்குதலை நடத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே இஸ்ரேல் பள்ளிக்கூடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இத்தகைய அகதிகள் புகலிடங்களில் ஹமாஸ் அமைப்பினர் மறைந்துகொண்டு அந்த இடங்களை ஹமாஸ் கமாண்ட் மையங்களாகப் பயன்படுத்துவதாக வந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலையடுத்து இத்தகைய தாக்குதல்களை நடத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர். 250 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். அதன்பின்னர் இஸ்ரேல் முழுவீச்சில் காசா மீது தாக்குதலை தொடங்கியது.

இதுவரை 40 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனர். 10 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்தப் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இந்தியா இந்தப் பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »