Our Feeds


Wednesday, July 24, 2024

Sri Lanka

விஜய்யின் முதல் அரசியல் மாநாடு திருச்சியில்


நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சியின் முதல் அரசியல் மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடத்தப்படவுள்ளது.

விரைவில் மாநாடு நடைபெறும் திகதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, கட்சி மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் என 10 இலட்சம் பேருக்கு உணவு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விஜய் கடந்த பெப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர்களைச் சேர்ப்பது, கட்சி நிர்வாகிகளை நியமிப்பது, விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர்களை தொடர்ந்து சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குவது, பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குவது போன்ற பணிகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.

மேலும், கட்சியில் யாருக்கெல்லாம், எந்தெந்தப் பதவிகளை வழங்குவது என்பது குறித்தும் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதனால், தமிழக வெற்றிக் கழகத்தில் எப்படியாவது பதவிகளைப் பெற்றுவிடவேண்டும் என்ற முனைப்போடு, தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் பம்பரமாகச் சுழன்று மக்கள் பணிகள், நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கட்சியின் கொடி, சின்னம், கொள்கைகளை மக்களிடம் கொண்டுசெல்வதற்காக தமிழக வெற்றிக் கழகம் பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »