ஆசிரியர் பணியில் இணைந்துகொள்ளும் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்காக தமது சேவைகளை அர்ப்பணிக்க வேண்டுமெனவும், ஒழுக்கமின்றி ஒரு நாட்டில் கல்வியைப் பேண முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக் கல்வியை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று கூறிய ஜனாதிபதி, இது தொடர்பில் தேவையான மேலதிக நடவடிக்கைகளை ஆராயுமாறு சட்டமா அதிபருக்கு தான் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (03) அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிள்ளைகளின் கல்வியில் சகலரும் கவனம் செலுத்துமாறும் நாசகார செயல்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் இணையவழி முறையில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பதவி உயர்வு அல்லது ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் எவருக்கும் அநீதி இழைக்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் வலியுறுத்தினார்.
அரச சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட 60 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டதுடன் 1,706 பட்டதாரிகளுக்கும் 453 ஆங்கில டிப்ளோமா பெற்றவர்களுக்கும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடையாளமாக சில நியமனங்களை வழங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.