பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “கித்துலாவ பபி” என்பவர் களுத்துறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை நகரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மற்றும் மேலதிக வகுப்பு மாணவர்களுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக களுத்துறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், களுத்துறை, கித்துலாவ பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த போதை மாத்திரை ஒன்று 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
இந்த போதை மாத்திரைகளைக் கொள்வனவு செய்வதற்கு களுத்துறை நகரம், தொடங்கொடை, நாகொடை மற்றும் ஹீனடியாகல ஆகிய பகுதிகளிலிருந்து மாணவர்கள் வருகை தருவதாக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.