இவ்வருடம் இலங்கையில் தேர்தல்கள் நடைபெறவிருப்பதனால்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்குப் பதிலாக, கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தை மேலும் ஒருவருடகாலத்துக்கு நீட்டிப்பதற்கான சாத்தியப்பாடு குறித்து ஜெனிவாவில் ஆராயப்பட்டுவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை தொடர்பில் கடந்த 2021 மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பிலான 46/1 தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகின்றது. எனவே இக்கூட்டத்தொடரில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் மேலும் காட்டமான புதிய பிரேரணையொன்றை முன்மொழியுமா அல்லது வேறு ஏதேனும் நகர்வுகளை மேற்கொள்ளுமா எனும் பல்தரப்பட்ட கேள்விகள் காணப்படுகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் இது தேர்தல் ஆண்டாகையால் புதியதொரு அரசாங்கம் ஆட்சிபீடமேறும் பட்சத்தில், அவ்வரசாங்கம் புதிய தீர்மானத்தை எவ்வாறு அணுகும்? அத்தீர்மானம் அரசாங்கத்துக்கு சுமையாக அமையக்கூடுமா? என்பன போன்ற கேள்விகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் இணையனுசரணை நாடுகள் மத்தியில் காணப்படுவதாகவும், எனவே எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக புதியதொரு பிரேரணையைக் கொண்டுவருவதற்குப் பதிலாக இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த தீர்மானத்தை மேலும் ஒருவருடத்துக்கு நீட்டிப்பதற்கான சாத்தியப்பாடு குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் மேற்குறிப்பிட்ட வட்டாரங்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேணிவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் கேசரியிடம் தெரிவித்தார்.
அதேவேளை தற்போது பிரிட்டனில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை அடுத்து, எதிர்வரும் மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதற்கான அழுத்தத்தை ஏனைய இணையனுசரணை நாடுகளுக்கு பிரிட்டன் வழங்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும், இருப்பினும் அவ்வாறு கொண்டுவரும் பட்சத்தில் அதன்மீதான வாக்கெடுப்பு முடிவுகள் எத்தகையதாக அமையக்கூடுமென உறுதியாகக் கூறமுடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.