Our Feeds


Sunday, July 7, 2024

SHAHNI RAMEES

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுமா உயர்நீதிமன்றம்? மக்கள் போராட்ட எழுச்சிக்கும், ஸ்திரத்தன்மை சீர்குலைவுக்குமே வழிகோலும் : சிரேஷ்ட சட்டத்தரணிகள் எச்சரிக்கை :


 தற்போது திட்டமிடப்பட்டுள்ளவாறு ஜனாதிபதித் தேர்தல்

நடத்தப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கும் நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஜனாதிபதித் தேர்தல் பிற்போடப்படுவதைக் கடுமையாக எதிர்த்துக் கருத்து வெளியிட்டுள்ளனர்.


ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவது அரசியலமைப்புக்கு முரணானது மாத்திரமல்ல எனவும், மாறாக அது நாட்டுமக்கள் தவறாக வழிநடத்தப்படுவதற்கும், நாட்டின் ஸ்திரத்தன்மை சீர்குலைவடைவதற்கும் வழிகோலும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.


ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடையும் தினம் தொடர்பில் நீதிமன்றத்தினால் வியாக்கியானம் வழங்கப்படும் வரை தற்போது திட்டமிடப்பட்டுள்ள வகையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


இருப்பினும் இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு கோரி 4 இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும், மனித உரிமைகள் சட்டத்தரணிகளும் ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கு எதிரான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளனர்.


கௌஷல்ய நவரத்ன


அதன்படி இவ்விடயம் தொடர்பில் கேசரியிடம் கருத்து வெளியிட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌஷல்ய நவரத்ன, தாம் கடந்த காலங்களில் தொடர்ச்சியாகக் கூறிவந்ததைப்போன்று தேர்தல்களைப் பிற்போடுவதற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே தற்போதும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.


'உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தவர்கள் அதில் அவர்களது தர்க்க நியாயங்களை உள்ளடக்கியிருப்பர். இவ்விவகாரம் தொடர்பில் ஒவ்வொருவரும் மாறுபட்ட தர்க்கத்தை முன்வைக்கக்கூடும். இருப்பினும் சட்டம் என்ற ஒன்று உண்டு. அதற்கமைவாகவே உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவேண்டும்' என வலியுறுத்திய அவர், இவ்விடயம் தொடர்பில் தமது விளக்கத்தை முன்வைப்பதற்கு சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் தயாராகிவருவதாகவும் தெரிவித்தார்.


எம்.ஏ.சுமந்திரன்


அதேவேளை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனும் உரிய காலப்பகுதியில் தேர்தல்கள் நடாத்தப்படவேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்களும் இல்லை என உறுதியாகக் கூறினார்.


'ஏற்கனவே மாகாணசபைத்தேர்தல்கள், உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் என்பன நீண்டகாலமாகப் பிற்போடப்பட்டுள்ளன. எனவே அதன் நீட்சியாக ஜனாதிபதித் தேர்தலையும் பிற்போடாமல், அதனை உரிய காலப்பகுதியில் நடாத்தவேண்டியது அவசியமாகும். அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவிவகித்த காலப்பகுதியிலேயே இத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. எனவே அதற்கு முன்னதாகவே பதவியேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது பதவிக்காலம் குறித்து நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்தார். இருப்பினும் அப்போதும் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதை நீதிமன்றம் பதிவுசெய்திருந்தது' என சுட்டிக்காட்டிய சுமந்திரன், தற்போது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனு தொடர்பில் எத்தகைய தீர்ப்பு வழங்கப்படும் அல்லது வழங்கப்படவேண்டும் என்பது பற்றிக் கூறமுடியாது என்றார். ஆனால் இம்மனு நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கும் நிலையில், பிரதிவாதிகள் தரப்பு தன்னை ஆஜராகுமாறு கோரியிருப்பதாகவும், அதற்கு அவர் உடன்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.


அம்பிகா சற்குணநாதன்


அதேபோன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில் முன்வைக்கப்பட்டிருக்கும் தர்க்கங்கள் ஒருபுறமிருக்க, அரசியலமைப்பின் பிரகாரம் இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தவேண்டும் எனவும், மாறாக அதனைப் பிற்போடுவது அரசியலமைப்புக்கு முரணானதாகவே அமையும் எனவும் சுட்டிக்காட்டிய சட்டத்தரணியும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன், தேர்தல்களைப் பிற்போடுவதை தான் முற்றாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்டார்.


கௌதமன்


இவ்விடயம் தொடர்பில் கருத்துரைத்த சட்டத்தரணியும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான கௌதமன், அரசியல் மற்றும் சட்டம் ஆகிய இரண்டு கோணங்களில் அவரது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.


அதன்படி அரசியல் ரீதியாக நோக்குமிடத்து, நாடளாவிய ரீதியில் பெரும்பான்மையான மக்கள் தேர்தல்கள் நடாத்தப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தேர்தல்களைப் பிற்போடுவதானது சட்ட மற்றும் ஜனநாயக முறைமையின் ஊடாக தமது உரிமையை உறுதிசெய்யமுடியாது எனவும், மாறாக போராட்டங்கள் மூலமே அதனை வென்றெடுக்கமுடியும் எனவும் மக்கள் கருதுவதற்கு இடமளிக்கும் எனக் குறிப்பிட்டார். அதுமாத்திரமன்றி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கு உத்தேசித்திருக்கும் ஏனைய பிரதான வேட்பாளர்கள் தேர்தலைப் பிற்போடுவதற்கு எத்தகைய பிரதிபலிப்பை வெளிக்காட்டுவார்கள் என உறுதியாகக் கூறமுடியாது எனவும், ஆகவே இவையனைத்தும் நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிப்படைவதற்கே வழிகோலும் எனவும் தெரிவித்தார்.


மேலும் 'சட்ட ரீதியாக நோக்குகையில், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முன்னைய ஜனாதிபதியின் பதவிக்காலத்துக்கு பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்பட்ட தற்போதைய ஜனாதிபதி நியமிக்கப்பட்டிருக்கின்றாரே தவிர, அவர் நாட்டுமக்களின் ஆணையைப் பெற்றவர் அல்ல. எனவே நாட்டுமக்கள் அவர்களது ஆணையை வழங்குவதற்கு இடமளிக்கக்கூடியவகையில் தேர்தலை உரிய காலப்பகுதியில் நடாத்தவேண்டியது அவசியமாகும்' என வலியுறுத்தினார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »