Our Feeds


Tuesday, July 23, 2024

SHAHNI RAMEES

வைத்தியர் அர்ச்சுனா பேராதனைக்கு இடமாற்றம்...!

 

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்றிலிருந்து பேராதனை வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார்.

 

அண்மை நாட்களாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்து மருத்துவர்களது குறைபாடுகள் தொடர்பாகவும், நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை வெளிக்கொணர்ந்திருந்தார்.

 

இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் எந்தவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அத்தியட்சகராக இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு சேவைகளை இலகுபடுத்தியும், வசதிகளை ஏற்படுத்தியும் கொடுத்திருந்த நிலையில் பிரதேச மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்த நிலையில் பேராதனை மருத்துவமனைக்கு தற்காலிக நியமனம் வழங்கப்பட்டமையால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

 

இது தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ள அவர் `சுகாதார அமைச்சு தனது மருத்துவ நிர்வாகத்தை பறித்து, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வைத்திய அதிகாரியாக தரமிறக்கியுள்ளது, சுகாதார அமைச்சின் குறைபாடுகளை வெளிப்படையாக விவாதித்த ஒருவருக்கு இது முறையான தண்டனையாக நான் கருதுகிறேன். திணைக்கள விசாரணை இன்னும் முடிவடையவில்லை.

 

இதேவேளை இரத்தம் தோய்ந்த உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ள நிலையிலும் எமது மக்கள் போராடி வருகின்றனர்.

 

சர்வதேச மட்ட அமைப்பின் மனித உரிமை மீறல் விசாரணைக்கு தேவையான அதே கடிதத்தில் கலாநிதி லால் பனாபிட்டிய கையொப்பமிட்டுள்ளார்.

 

அதார வைத்தியசாலை ஊழலை வெளிக் கொண்டுவந்ததற்காக பரிசு வழங்கப்படுகிறது.

 

ஊழல் செய்த அனைத்து நபர்களும் அவர்கள் செய்து வரும் விடயங்களை மறைத்து வருகின்றனர், ஆனால் உண்மையை உரக்கப் பேசுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்' என்றும் பதிவிட்டுள்ளார்.

 

பு.கஜிந்தன்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »