Our Feeds


Friday, July 5, 2024

Sri Lanka

கொழும்பில் உயிரிழந்த மாணவர்கள் - தொலைபேசியில் இருந்த முக்கிய ஆதாரங்கள்



கொழும்பு அல்டெயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது மாணவனும் மாணவியும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.


கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் இருவரே உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் சடலங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் 03வது மாடியில் குளிரூட்டிகள் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதுடன், இயந்திரங்களில் விழுந்துள்ளதாக உடல்கள் சிதைவடைந்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த மாணவனும் மாணவியும் நெருங்கிய நண்பர்கள் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும், குறித்த மாணவி உயரமான இடங்களில் புகைப்படம் எடுப்பதில் நாட்டம் கொண்டவர் எனவும், அவரது தொலைபேசியில் இதுபோன்ற பல புகைப்படங்கள் இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.


அதன்படி, அவ்வாறான புகைப்படங்களை எடுக்க முற்பட்ட போது இருவரும் 67வது மாடியில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


எவ்வாறாயினும், விபத்து ஏற்படுவதற்கு முன்னர் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.


அல்டெயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பிற்கு செல்வதற்கு அங்கு வசித்த அவர்களது நெருங்கிய நண்பர் ஒருவரால் அனுமதி வழங்கப்பட்டது. அந்த நண்பர் காரணமாக மாணவனும் மாணவியும் அடிக்கடி குடியிருப்புத் தொகுதிக்கு வந்து செல்லும் நிலையில், அன்றைய தினம் அங்கு வருவதை பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


மகள் வீட்டிற்கு வர தாமதமானதால், அவரது தந்தை மாணவனுக்கு அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அவர் தன்னுடன் இல்லை என்று கூறியுள்ளார்.


எனினும் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்படும் என குறித்த மாணவியின் தந்தை கூறியதையடுத்து எழுந்த அச்சம் காரணமாக இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்தார்களா என்பது தொடர்பிலும் விசாரணை அதிகாரிகளின் கவனம் செலுத்தியுள்ளனர்.


மேலதிக விசாரணைகளுக்காக மாணவன் மற்றும் மாணவியின் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


கொம்பனித் தெரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில விஜேமான்ன தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவர்களது சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதேவேளை, சம்பவத்தன்று மாணவி பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »