Our Feeds


Monday, July 8, 2024

SHAHNI RAMEES

யார் நீதிமன்றத்திற்கு சென்றாலும் ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் நடைபெறும் - ஜனாதிபதி

 


மறைந்த ஆர். சம்பந்தன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக

மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் உரிமைகளுக்காகவும் முன் நின்ற தலைவர் என்றும் சம்பந்தனும் தானும் எப்போதும் பிரிக்கப்படாத இலங்கைக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


ஆர். சம்பந்தனுடன் உடன்பாட்டுடன் முன்நோக்கி கொண்டு வந்த அந்தக் கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


திருகோணமலையில் அன்னாரது இல்லத்தில் இன்று (07) பிற்பகல் நடைபெற்ற சம்பந்தனின் இறுதி கிரியையில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.


முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த ஆர். இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியைகள், இன்று (07) பிற்பகல் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.


ஆர். சம்பந்தனின் மரணம் தொடர்பில் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த ஜனாதிபதி, அவரது மறைவு நீண்டகால நண்பரின் இழப்பு எனவும் குறிப்பிட்டார்.


ஆர். சம்பந்தன் எப்பொழுதும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தேசிய காணி ஆணைக்குழுவின் வரைவு தற்போது பாராளுமன்றத்தில் சமர்பிக்க தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வனவளத் திணைக்களத்துடன் இருக்கும் பிரச்சினைகளை சட்டரீதியாக தீர்க்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.


எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தனின் பங்களிப்பைப் பாராட்டிய ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஒரு மாற்றுப் பிரதமர் என்று குறிப்பிட்டதுடன், ஆர். சம்பந்தன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, உண்மையான எதிர்க்கட்சித் தலைவரின் பண்புகளை வெளிப்படுத்தியதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.


இதேவேளை, தேர்தல்கள் குறித்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, யார் நீதிமன்றத்திற்கு சென்றாலும், இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்றும், அதன் பின்னரே பாராளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.


இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,


ஆர். சம்பந்தனின் மறைவால் நீண்டகால நண்பரை இழந்துவிட்டேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு நான் புதிய சட்டத்தரணியாக செயற்பட்டபோதே ஒரு சட்டத்தரணியாக நான் அவரை சந்தித்தேன். 1977 ஆம் ஆண்டு நானும் சம்பந்தனும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்திற்கு வந்தோம்.


அந்தப் பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலையில் எமது கட்சியின் செயற்குழு உறுப்பினர் நவரத்தினம் ராஜாவை நான் ஆதரித்தேன். ஆனால் அந்த போட்டியில் ஆர். சம்பந்தன் வெற்றி பெற்றார்.


குறிப்பாக தனிநாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையின்படி பாராளுமன்றம் இரு தரப்பாக பிரிந்தது. ஆர். சம்பந்தன் ஆளுங்கட்சி உறுப்பினர்களுடன் சிறப்பான உறவைக் கொண்டிருந்தார்.


இந்த நாட்டைப் பிரிக்க முடியாது என்பதால், சமஷ்டி ஆட்சி முறையில் அல்லது மாவட்ட சபை முறையை விட அதிக அதிகாரங்களை வழங்குவது குறித்து தொடர்ந்து கலந்துரையாடி வந்தோம்.


எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. திருகோணமலையில் ஒரு காணியை நான் இளைஞர் சேவை மன்றத்திற்கு வழங்கிய போது பாராளுமன்றத்தில் கூட எமக்கிடையில் விவாதங்கள் இடம்பெற்றன. இதைக் கட்டுப்படுத்த அவர் எடுத்த முயற்சியும், நாங்கள் எடுத்த முயற்சியும் வெற்றி பெறவில்லை.


அவர் 1983 இல் இலங்கையை விட்டு வெளியேறினார். மறுபடியும் அவர் பாராளுமன்றத்துக்கு வந்த பிறகு, நாங்கள் மீண்டும் தொடர்புகளைப் பேணினோம். 2009 இல் யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக மீண்டும் அவருடன் இணைந்து செயல்படும் வாய்ப்புக் கிடைத்தது.


அவர் ஒருபோதும் தனி நாடு கோரவில்லை. அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று எப்போதும் கூறினார். தமிழ் மக்கள் துன்பப்படுவதாகவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


நாங்கள் தேர்தலில் இணைந்து பணியாற்றியுள்ளதுடன், பொது வேட்பாளர்களை ஆதரித்துள்ளோம். குறிப்பாக மைத்திரிபால சிறிசேனவுக்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டோம். அதற்கு முன் சரத் பொன்சேகாவுக்காக செயற்பட்டோம்.


கடந்த கால நிகழ்வுகள் மற்றும் அரசியல் குறித்து அவரிடம் எப்போதும் நான் கதைப்பேன். 1948 இல் இந்த நாடு சுதந்திரம் பெறும் வாய்ப்பைப் பார்த்த ஒரே எம்.பி. அவர். மேலும் அரசியல் பற்றியும் நாம் கதைப்போம்.


அதன் பிறகு அவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார். அதன்போது தனது சிறப்பான குணத்தை எடுத்துக் காட்டினார். தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசியதோடு, அதற்காக பாடுபட்டார். அது மாத்திரமன்றி அனைத்து இலங்கையர்களின் பிரச்சினைகளையும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் முன்வைத்தார். அப்போது அவர் உண்மையான எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார். உண்மையான எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் மாற்றுப் பிரதமர் ஆவார்.


2018 ஆம் ஆண்டு அரசாங்கத்தில் ஏற்பட்ட நெருக்கடி நேரம், நான் பிரதமர் பதவியை இழந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக அவர் சிறந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார். வேறு காரணங்களால், எங்களது கலந்துரையாடல் வெற்றியடையவில்லை, குறிப்பாக உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னர், அரசியல் தீர்வுகளை முன்வைப்பதற்கான பின்னணி எம்மிடம் இருக்கவில்லை.


நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்த விடயங்களை அவருடன் கலந்துரையாடினேன். மேலும் தமிழ் கட்சிகள் மற்றும் எம்.பி.க்களுடன் கலந்துரையாடப்பட்டது. மிக முக்கியமான சில கருத்துகள் அங்கு பேசப்பட்டன. பிரிக்கப்படாத இலங்கையில் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டோம். இப்பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு நான் முன்னுரிமை வழங்க வேண்டியிருந்தது. இதனால், கடந்த சில மாதங்களாக எங்களது கலந்துரையாடல்களை முன்னெடுக்க முடியவில்லை.


இந்த கலந்துரையாடல்களை இந்த பாராளுமன்ற வாரத்தில் மீண்டும் தொடங்க முடியுமா என்று நான் விசாரித்தேன். ஆனால் அந்த வாய்ப்பிற்கு முன்னரே சம்பந்தன் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். ஆனால் இந்த கலந்துரையாடல்களை நாம் தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டு சென்று நிறைவு செய்ய வேண்டும். தேசிய காணி ஆணைக்குழுவின் வரைவு தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகியுள்ளது.


சிங்கள, தமிழ், மற்றும் முஸ்லிம்கள் தமது கிராமங்களை சுவீகரிப்பது தொடர்பில் வனவளத் திணைக்களத்துடன் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அந்தப் பிரச்சினைகளை சட்டத்தின் மூலம் தீர்க்க இந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.


மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துவது என கலந்துரையாடி தீர்மானித்துள்ளோம். யார் நீதிமன்றத்திற்கு சென்றாலும் இந்த வருடமே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். அடுத்து பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்.


புதிய முறைமையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையிலேயே நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்காக எங்களுக்குள் உட்னபாடு ஏற்பட்டிருந்தது. பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை வழங்குவதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் அங்கத்துவத்தை வைத்துக்கொண்டு இதற்காக போட்டியிட அனுமதிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.


13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பொலிஸ் அதிகாரம் இல்லாமல் மத்திய அரசிடம் இருந்து வேறு பல அதிகாரங்களை பெற்றுக்கொள்ள இப்போது பாராளுமன்றத்தில் இருக்கும் பிரதான உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். ஏனைய அதிகாரங்கள் பற்றி பின்னர் கலந்துரையாடலாம்.


புதிய பரிந்துரையாக, அதிகாரப் பகிர்வில் 13 ஆவது திருத்தத்தின் கட்டமைப்பிற்குள் அதிகபட்ச அதிகாரத்தை பரவலாக்குவதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. மேலும், நவாஸ் ஆணைக்குழு அறிக்கை குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது. ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்ட மூலத்தை (TRC) முன்வைக்கத் தயார் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் என்னிடம் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், மக்கள் சபை முறை குறித்தும் இப்போது கலந்துரையாடி உடன்பாடு எட்டியுள்ளோம். இந்த கலந்துரையாடல்களை முன்னோக்கி கொண்டு சென்று நிறைவு செய்ய நாம் எதிர்பார்க்கின்றோம்.


சம்பந்தன் தமிழ் மக்களின் உரிமைக்காக பாடுபட்ட தலைவர். சம்பந்தன் இலங்கை மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த தலைவர். நாம் இருவரும், பிரிக்கப்படாத இலங்கைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள். அதற்காக நாங்கள் இருவரும் உடன்பாட்டுடன் கலந்துரையாடல்களை முன்னோக்கி கொண்டு சென்றதுடன் இப்பணியை நிறைவு செய்ய அனைவரும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.


இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை உட்பட பல வெளிநாட்டு தூதரகப் பிரதிநிதிகளும் இறுதி கிரியையில் கலந்து கொண்டனர். அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், லக்ஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதுர்தீன், எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், மாவை சேனாதிராஜா, எஸ். இராசமாணிக்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நளின் டி ஜயதிஸ்ஸ மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பிரதேசத்தைச்


சேர்ந்த பெருந்தொகையான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »