Our Feeds


Thursday, July 11, 2024

SHAHNI RAMEES

ஜனாதிபதி புலமைப்பரிசில் – நாளை முதல் மாவட்ட மட்டத்தில் வழங்க ஏற்பாடு

 



க.பொ.த உயர் தரம் மற்றும் முதலாம் தரம் முதல் 11 ஆம் தரம்

வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை நாளை (12) முதல் மாவட்ட மட்டத்தில் செயற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


கொழும்பு மாவட்டத்தில் மாணவருக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு ஜூன் 19 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றதுடன் ஏனைய 24 மாவட்டங்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நாளை முதல் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.


இதன்படி, பதுளை, மாத்தளை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஜூலை 13 ஆம் திகதியும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஜூலை 14 ஆம் திகதியும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாளையும் (12), ஜூலை 15 ஆம் திகதியும், கம்பஹா மாவட்டத்தில் ஜூலை 16 மற்றும் 17 ஆம் திகதிகளிலும், காலி மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் எதிர்வரும் 15 ஆம், 16 ஆம் திகதிகளிலும், வவுனியா, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும், களுத்துறை, மன்னார், அம்பாறை, குருநாகல், கண்டி மாவட்டங்களில் ஜூலை 17ஆம் திகதியும் முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் ஜூலை 18ஆம் திகதியும் மொணராகலை, மாத்தறை மாவட்டங்களில் ஜூலை 19ஆம் திகதியும், புத்தளம் மாவட்டத்தில் ஜூலை 22ஆம் திகதியும் புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


முதலாம் கட்டத்தில் புலமைப் பரிசில் பெறும் மாணவர்களில் ஒருபகுதியினர் மாத்திரம் புலமைப்பரிசில் வழங்கும் விழாவிற்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


க.பொ.த உயர் தர மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.6000/- வீதம், 24 மாதங்களுக்கு வழங்கப்படவிருப்பதோடு ஒரு கல்வி வலயத்திலிருந்து 60 மாணவர்களைத் தெரிவு செய்து 6,000 மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்படும்.


இந்த மாணவர்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுடன் ரூ.30,000/- புலமைப்பரிசில் தொகை புலமை பரிசில் வழங்கும் நிகழ்வில் வழங்குவதற்கும், அடுத்த மாதம் முதல் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை மாதம் ரூ.6000/- புலமைப்பரிசில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


முதலாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள நாட்டின் 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான 12 மாதங்களுக்கு மாதாந்தம் ரூ.3000/-வீதம் உதவித் தொகை வழங்கப்படும்.


புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்காத பாடசாலைகள் தொடர்பான பட்டியில் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.


இதன்படி, ஏதாவது பாடசாலை புலமைப்பரிசில் பெற விண்ணப்பிக்கவில்லை என்றால், அது தொடர்பில் ஆராய்ந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பெற்றோர் மற்றும் பிள்ளைகளை ஜனாதிபதி நிதியம் கோருகிறது.


இந்த இக்கட்டான நேரத்தில் யாரையும் கைவிடக்கூடாது என்பது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருத்தாகும். பிள்ளைகளுக்கு அதிக கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கும், நிதி நெருக்கடி காரணமாக பிள்ளையொன்று பாடசாலையை விட்டு விலகும் நிலை இருந்தால் அவ்வாறான நிலைமைகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைக்கமைய புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்காத பாடசாலைகளுக்கு மீண்டும் புலமைப்பரிசில்களைப் பெற விண்ணப்பித்து அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜனாதிபதி நிதியம் கோரியுள்ளது.


இந்த புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் தொடர்பான மேலதிக தகவல்களை அந்தந்த மாவட்ட செயலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் மாத்திரம் ஜனாதிபதி நிதிய அதிகாரிகளை 0112354354 – தொடர் இலக்கம் 4835 மற்றும் 0740854527 (Whatsapp மட்டும்) மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »