Our Feeds


Sunday, July 14, 2024

Zameera

மாணவர்கள் போதைப்பொருளுக்கு ஒருபோதும் அடிமையாகக்கூடாது


 மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகாமல் இருப்பதோடு பெற்றோர்களும் மதுபானம்,  போதைப்பொருள்களை தவிர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப செயற்றிட்டத்தின் கீழ், 309ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன கொழும்பு, திம்பிரிகஸ்யாய, சசுமயவர்தன மகா வித்தியாலயத்துக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,   

மக்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், வருமானம் ஈட்டும் வழிகளிலும் மீளமுடியாத வகையில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கஷ்டங்கள் நிறைந்த பெரும் அழுத்தங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். நகர்ப்புற வறுமை கூட வியாபித்துள்ளது. இதனால் சமூக விரோத நடவடிக்கைகள் கூட இன்று சமூகத்தில் இடம்பெற்று வருகின்றன.

பாடசாலை மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகாமல், நடுநிலை சிந்தனையோடு செயற்பட வேண்டும். நேரிய சிந்தனையோடு பாடசாலை பிள்ளைகள் வளர வேண்டும்.

மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகக்கூடாது. மதுப்பழக்கம் ஒரு நாகரிகமற்ற செயலாகும். பெற்றோர்களும் மதுவை தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோரைப் பின்பற்றுகிறார்கள். எனவே, இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

சரியானதைச் செய்து சரியான பாதையில் செல்ல வேண்டும். பெரியவர்களை மதிக்க வேண்டும். பணிவாக நடந்துகொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்பத்துறையில் பிரவேசித்து ஸ்மார்ட் கல்வியை முன்னெடுக்க வேண்டும்.

கல்வி எனும் பெறுமதிமிக்க வளத்தை எவராலும் ஒருபோதும் திருட முடியாது. எனவே, பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியையும் நல்ல நாகரிக வாழ்க்கையையும் அமைத்துக் கொடுக்க சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »