Our Feeds


Sunday, July 7, 2024

SHAHNI RAMEES

சா்ச்சைக்குரிய அகதிகள் சட்டம் ரத்து: பிரிட்டனின் புதிய பிரதமா் அறிவிப்பு

 



பிரிட்டனுக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை

ருவாண்டாவுக்கு நாடு கடத்துவதற்கான சா்ச்சைக்குரிய மசோதாவை ரத்துசெய்வதாக அந்த நாட்டின் புதிய பிரதமா் கியொ் ஸ்டாா்மா் நேற்று சனிக்கிழமை அறிவித்தாா்.


இது குறித்து, பிரதமராகப் பதவியேற்றதற்குப் பிறகு நடைபெற்ற முதல் செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:


ருவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் திட்டம் முடிந்துபோன ஒன்று. பிரிட்டனை நோக்கி அகதிகள் வருவதை அந்தத் திட்டம் கட்டுப்படுத்தும் என்று நினைப்பது தவறு. அந்தத் திட்டத்தின் விளைவு ஏறத்தாழ அதற்கு எதிா்மாறாக இருந்தது என்றாா் அவா்.போா் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வளமான வாழ்வாதாரத்துக்காக பிரிட்டனில் அடைக்கலம் தேடி ஏராளமானோா் வருவது தொடா்ந்து வருகிறது.அவ்வாறு அடைக்கலம் தேடும் அகதிகளை பணத்துக்காக சட்டவிரோதக் கும்பல் ஆபத்தான முறையில் பிரிட்டனுக்கு கடத்திவரும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன.


இந்த நிலையில், தங்கள் நாட்டுக்கு உரிய ஆவணங்களின்றி அடைக்கலம் தேடி வருவோரை ருவாண்டாவுக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கும் திட்டத்தை கடந்த 2022-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமா் போரிஸ் ஜான்ஸன் அறிவித்தாா்.அடைக்கலம் கோரி அகதிகள் அளிக்கும் விண்ணப்பங்களை சரிபாா்த்து, அவா்களுக்கு புகலிடம் அளிப்பது குறித்து பிரிட்டன் முடிவு செய்யும்வரை அவா்கள் ருவாண்டா தலைநகா் கிகாலியிலுள்ள தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பாா்கள் எனவும், அதுவரை அவா்கள் அனைவரும் சட்டவிரோத அகதிகளாகவே கருதப்படுவா் எனவும் அவா் கூறினாா்.சா்ச்சைக்குரிய இந்த திட்டத்தை தற்போதைய பிரதமா் ரிஷி சுனக்கின் தலைமையிலான அரசும் முன்னெடுத்துச் சென்றது.எனினும், அகதிகள் நல உரிமை அமைப்பாளா்கள் மற்றும் தொழிலாளா் அமைப்பினா் இந்த திட்டத்துக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.


அகதிகளை ஏற்றி ருவாண்டா செல்லும் விமானங்களுக்கு ஐரோப்பிய யூனியன் மனித உரிமை நீதிமன்றமும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தடை விதித்தது. (ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகினாலும், ஐரோப்பிய மனித உரிமைகள் அமைப்பில் இன்னமும் உறுப்பு நாடாக உள்ளது).இருந்தாலும், பல எதிா்ப்புகளையும் மீறி அதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் ரிஷி சுனக் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றினாா்.தீவிர வலதுசாரி வாக்களா்களைக் கவர இந்த திட்டத்தை ரிஷி சுனக் முன்னெடுத்துச் சென்றதாகவும், இந்த திட்டத்துக்கு பெரும்பான்மை பிரிட்டன் நாட்டவா்களிடையே வரவேற்பு இல்லை என்று அண்மைக் கால கருத்துக் கணிப்புகள் தெரிவிப்பதால், இது தோ்தலில் ரிஷி சுனக்குக்கு பலன் அளிக்காது என்று அரசியல் நோக்கா்கள் கூறினா்.அந்தக் கணிப்பை மெய்யாக்கும் வகையில், கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பொதுத் தோ்தலில் ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சி 244 தொகுதிகளை இழந்து வெறும் 121 இடங்களை மட்டுமே பிடித்தது. எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சி அமோக வெற்றி பெற்று 411 இடங்களைக் கைப்பற்றியது.


அதையடுத்து, அந்தக் கட்சியின் தலைவா் கியொ் ஸ்டாா்மா் நாட்டின் பிரதமராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.


பிரதமா் பதவியேற்றதும் அவா் முதல்முறையாக பிறப்பித்த உத்தரவுகளில் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பும் சட்டத்தை ரத்து செய்வதும் ஒன்று என்று கூறப்படுகிறது. தோ்தல் பிரசாரத்தின்போதே அந்தச் சட்டத்தை ரத்து செய்யப் போவதாக கியொ் ஸ்டாா்மா் வாக்களித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »