Our Feeds


Monday, July 15, 2024

SHAHNI RAMEES

இம்ரான் கானின் கட்சிக்கு தடை...!

 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியை தடை செய்ய ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இந்த தகவலை அந்நாட்டு அமைச்சர் அட்டாவுல்லா தரார் உறுதிப்படுத்தியுள்ளார். இது அந்நாட்டு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி பாகிஸ்தானின் மிகப்பெரிய எதிர்க்கட்சியாகும்.

பிடிஐ கட்சிக்கு தடை விதிக்க இருப்பதற்கான காரணங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அட்டாவுல்லா தரார், “பிடிஐ கட்சி தேச விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளது. சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதிகளை அக்கட்சி பெற்றுள்ளது. அதற்கு நம்பத் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. வெளிநாட்டு நிதியுதவி வழக்கு, மே 9 கலவரம் போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இம்ரான் கானின் கட்சியை தடை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இனி பாகிஸ்தானும், பிடிஐ கட்சியும் இணைந்திருக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தில் பிடிஐ கட்சிக்கு தடை விதிப்பது தொடர்பாக மனு தாக்கல் செய்யவுள்ளோம். மேலும், இம்ரான் கான் மற்றும் முன்னாள் அதிபர் ஆரிப் ஆல்வி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யவும் இந்த அரசு முடிவு செய்துள்ளது.” என்றார்.

முன்னதாக, பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு பிரதமரானார் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவரான இம்ரான் கான். 2022-ம் ஆண்டு பிரதான கூட்டணி கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி), பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ்(பிஎம்எல்-என்) தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றன. மேலும், அந்நாட்டின் ராணுவமும் இம்ரான் கானுக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக் கொண்டது. இதனால், இம்ரான் கான் நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் முற்றிலுமான ஆதரவை இழந்தார். அப்போது, பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார்.

அதன்பின், பாகிஸ்தான் ’தேர்தல் ஆணையம்’ தொடர்ந்த பரிசுப் பொருட்கள் தொடர்பான ‘தோஷகானா ஊழல்’ வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. பின், மேல்முறையீட்டில் தண்டனை ரத்து செய்யப்பட்டது. ஆனால், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. நாட்டின் ரகசியங்களை வெளியிட்ட ’சைஃபர் கேஸ்’ குற்றத்துக்காக, இந்த ஆண்டு ஜனவரி 30-ம் திகதி 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம். இதுபோன்று தனக்கு எதிரான பல வழக்குகளின் காரணமாக ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இம்ரான் கான்.

இதற்கிடையே தான், கடந்த வாரம் இதில் திருமண வழக்கு ஒன்றில் இம்ரான் கானுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டது. இதேபோல் பரிசுப்பொருட்கள் வழக்குகளில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »