பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வலுவான பொருளாதார முறைமையொன்று கட்டியெழுப்படும் எனவும் அந்த முறைமை குறுகிய காலத்திற்கானதாக அன்றி நீண்ட காலத்திற்கு நாட்டின் பொருளாதாரம் சரிவடையாமல் பாதுகாக்கும் வகையில் வலுவாக கட்டமைக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற நவீன வசதிகளுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பெயர் பலகையை திரைநீக்கம் செய்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை மாணவர் பாவனைக்காக ஜனதிபதி திறந்து வைத்தார்.
அதனையடுத்து நீச்சல் தடாகம் அமைந்திருக்கும் பகுதியை அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு கையளிக்கும் நிகழ்வும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
2023 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி சிறப்புச் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கான சான்றிதழ்களையும் பரிசுகளையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது வழங்கி வைத்தார்.
அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தினால் ஜனாதிபதி நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட 10 ஆயிரம் ரூபா பாடசாலையின் அதிபர் பேர்ஸி மஹாநாமவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.