சுதந்திரப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்த மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 30% அரசு வேலை வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவால், பங்களாதேஷிவ் கடந்த சில நாட்களாக பெரும் போராட்டம் வெடித்து வருகிறது.
இதனால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 100 பேர் உயிரிழந்ததாக பிபிசி செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று அந்நாட்டு உயர் நீதிமன்றம் விசேட உத்தரவை பிறப்பித்துள்ளது.
அரசு வேலைகளில் 93% தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்றும், போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 5% அரசு வேலை மட்டுமே வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு பங்களாதேஷ் அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.
இன்றைய நிலவரப்படி, நாட்டில் இரண்டாவது நாளாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், தலைநகர் டாக்காவின் வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.