Our Feeds


Saturday, July 6, 2024

SHAHNI RAMEES

கனவுலகில் இருக்காமல் நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் செயற்படுத்தி முன்னேறுவோம்...! - ஜனாதிபதி ரணில்

 

நாட்டில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார முறைமையொன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அச்சமின்றி உண்மையைப் பேசக்கூடிய தலைவர்கள் அரசியல் கட்டமைப்பில் உருவாக வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தேசிய வங்கியாளர்கள் ஒன்றியத்தினால் நேற்று (05) காலிமுகத்திடல் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட வங்கியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கனவுலகில் இருப்பதை விடுத்து நாட்டுக்குத் தேவையான வேலைத்திட்டத்தை அடையாளம் கண்டு செயற்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை முன்னேற்றிச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதெனவும் வலியுறுத்தினார்.

ஏற்றுமதிப் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு நாட்டில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்துவதே தமது நோக்கமாகும் என தெரிவித்த ஜனாதிபதி, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வேலைத்திட்டத்தை முன்னோக்கிக் கொண்டுச் செல்வதில் வங்கிக் கட்டமைப்புக்கு முக்கிய வகிபாகம் உள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சிலர் அர்ஜென்டினாவின் மார்ட்டின் குஸ்மானைப் பற்றி பேசுகின்றனர். அவர் ஒரு தோல்வியடைந்த தலைவர். அதேபோல் மற்றும் சிலர், உலகம் முழுவதும் சென்று தலைவர்களிடம் பணம் கேட்கச் செல்கிறார்கள். நான் யாசகன் அல்ல. சிங்கள தேசம் பிச்சைக்கார தேசமும் அல்ல. மேலும் சிலர் இறக்குமதி சார்ந்த பொருளாதாரம் தொடர்பில் பல விடயங்களை கூறுகிறார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

“சர்வதேச நாணய நிதியம் வேண்டாம் என்று கூறியபோதும் பொருளாதார நெருக்கடி இருப்பதை கருத்தில் கொள்ளாமல் எதற்காக வரிகளை குறைத்தீர்கள்” என ஒருநாள் நான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கேட்டேன், தொழில் உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையின் காரணமாகவே அதனைச் செய்ததாகக் கூறினார்.

அவர் சொன்னதுதான் உண்மை. அதனை நானும் அறிவேன். நீங்கள் ஏன் வரியைக் குறைக்கவில்லை என்றும் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அப்படிக் கேட்டவர்களை இன்று தேடிக்கொள்ள முடியவில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் தனிமையில் இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

நாட்டுக்குத் தேவையான வேலைத்திட்டத்தை நாம் சரியாகத் தேர்ந்தெடுத்து முன்னேற வேண்டும். கனவுலகில் இருப்பது நல்லதல்ல. உண்மையை அறிந்து செயல்பட வேண்டும். இன்றைய நடவடிக்கைகளே நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும். நாம் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகிறோம். புதிய அரசியல் முறைமையை நாம் உருவாக்க வேண்டும். அதற்கான பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டு உண்மை நிலவரத்தை அச்சமின்றி பேசக்கூடியவர்களையும் உருவாக்க வேண்டும். இல்வாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் இருக்காது.

பொதுஜன பெரமுனவின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் எதிர்காலம் பற்றி சிந்திக்காமல் எம்முடன் இணைந்துள்ளனர். இன்று நாம் பொருளாதாரத்தை தயார் செய்துள்ள நிலைக்கு அரசியல் முறைமை வரவில்லை. அது பற்றிய சிந்தனையுடன் பணியாற்ற வேண்டும்” என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »