எமது நாட்டில் 200 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட சமூகம் எமது நாட்டினது மக்கள் தொகுதியாகும். தோட்ட மக்களுக்கு குடியுரிமை வழங்கும் பணிகளில் ரணசிங்க பிரேமதாச பெரும் பங்காற்றினார். குடியுரிமை குறித்து பேசும் போது, காணி உரிமை இல்லாத குடியுரிமை பயனற்றது. எமது நாட்டின் பிரஜைகள் தமது சொந்த காணியிலும், வீட்டிலும் வாழும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. இது அவர்களது அடிப்படை உரிமை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் மட்டுமே உள்ளடங்கியுள்ளன. எமது நாட்டிலும் தென்னாப்பிரிக்காவின் அரசியலமைப்பைப் போல, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு மேலதிகமாக, பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், வாழ்வாதாரம், சுகாதாரம், கல்வி மற்றும் சொந்த வீட்டுக்கான உரிமைகளையும் உள்ளடக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எமது நாட்டின் பெருந்தோட்டத்துறையில் அப்பாவியாக வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வோடு விளையாடும் அரசியல் விளையாட்டுகளுக்கு இடம்கொடுக்காமல், விவசாயம் செய்யப்படாத தனியார் மற்றும் அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்களை இவர்களுக்கு வழங்கி, சொந்தமாக வீடு கட்டி, அந்த காணியில் சிறிய தேயிலை தோட்டம் அமைத்து, மக்கள் சமூகத்தில் கௌரவமான வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமையையும், வரத்தினையும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பெற்றுத்தருவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மக்களின் வாழ்க்கைக்கு தேவையான விடயங்கள் குறித்தான அம்சங்கள் அடிப்படை உரிமைகள் அத்தியாத்தில் சேர்க்கப்படும் போது, ஒவ்வொரு ஆட்சியாளரும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அழுத்தத்தைச் சந்திப்பார். இது ஆட்சியாளர்களது பொறுப்பாகிவிடும்.
அடிப்படை உரிமைகள் குறித்து பேசினாலும், கொரோனா வைரஸின் போது முஸ்லிம் மக்களினது மத மற்றும் கலாச்சார உரிமைகள் மீறப்பட்டன. தகனமா அடக்கமா என்ற விவகாரத்தில் தவறான அறிவியல் அறிக்கைகளைக் காட்டி முஸ்லிம் சமூகத்தினர் பாராபட்சமாக தாக்கப்பட்டனர். மத, கலாசார உரிமைகளை அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் சேர்க்கப்பட்டிருந்தால் ஆட்சியாளர்களால் அவ்வாறான நடவடிக்கைகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 351 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன,
கண்டி, கஹவடகோரலை, விவேகானந்தா கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 21 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
குடிமக்களின் உரிமைகள் குறுகியதாக வரையறுக்கப்படாமல், பரந்த அளவில் வரையறுக்கப்பட வேண்டும். எல்லா இனத்தினதும், எல்லா மதத்தினதும் அரசியல், சிவில், சமூக, பொருளாதார, சுகாதாரம், கல்வி, வாழ்க்கை மற்றும் வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்கும் முற்போக்கான அரசியலமைப்பு நமது நாட்டிற்குத் தேவையாக காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
விவேகானந்தா கல்லூரிக்கு அருகாமையில் அமைந்து காணப்படும் மாவட்ட செயலகத்துக்குச் சொந்தமான சிறு காணியை இப்பாடசாலைக்குப் பெற்றுத் தருவேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தனதுரையில் வாக்குறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இத்திட்டத்தின் மூலம் ஒரு மாதத்திற்குள் 100 ஸ்மார்ட் வகுப்பறைகள் நன்கொடையாக வழங்கப்பட்டிருப்பது சிறப்பம்சம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.