Our Feeds


Friday, July 26, 2024

Sri Lanka

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் த.மு.கூட்டணியின் முடிவு?


கொழும்பில் ஒகஸ்ட் 2ஆம் திகதி நேரடியாகவும், மெய்நிகர் மூலமாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு கூட்டம் நடைபெறும். இதன்போது செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், ஆராயப்பட்டு அதிகாரபூர்வ தீர்மானங்கள் எடுக்கப்படும்.

உத்தேச ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தில் நடைபெற வேண்டும் என்ற நோக்கில், தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் நலன் சார்ந்து ஏற்கனவே செய்து கொண்டுள்ள சமூக நீதி உடன்படிக்கையை மேலும் தரமுயர்த்துவது, அதன் சாராம்சங்களை ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெறச் செய்வது, ஐக்கிய மக்கள் கூட்டணியில் சட்டபூர்வமாக இணைவது தொடர்பாக, ஐக்கிய மக்கள் கூட்டணியின் நகல் யாப்பை ஆராய்வது, இதையடுத்து இடம்பெற கூடிய பாராளுமன்ற தேர்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில், அரசியல் குழுவில் காத்திரமாக ஆராயப்படும் என கூட்டணி தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

இது தொடர்பில், மனோ எம்.பி மேலும் கூறியுள்ளதாவது;  

தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கு பெறுகின்ற எமது அரசாங்கம் விரைவில் உருவாகும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. த.மு.கூட்டணி, வெறும் வாய் பேச்சில் காலத்தை கடத்தும் கட்சி அல்ல, என்பதை நாம் எமது முதல் கட்ட 2015-2019 நல்லாட்சி காலத்திலேயே நிரூபித்து உள்ளோம். அன்று நாம் ஆரம்பித்து வைத்த பல முற்போக்கு பணிகள் இன்று நின்றுப்போயுள்ளன. அவற்றை மீள ஆரம்பிக்க நாம் மீள ஆட்சிக்கு வர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

வாழ்வாதார காணி உரிமை, வதிவிட வீட்டு காணி உரிமை, இடைகால சம்பளம், கல்வி, சுகாதாரம் ஆகிய அனைத்து துறைகளிலும் மறுமலர்ச்சியை த.மு.கூட்டணி ஏற்படுத்தும். இந்த அரசு மலையக பெருந்தோட்ட மக்கள் மத்தியில், நாள் சம்பளம், இந்திய நன்கொடை வீடமைப்பு திட்டத்துக்கு காணி வழங்கல், சுயமாக வீடு கட்டி கொள்ள காணி வழங்கல் ஆகிய மூன்று முக்கிய துறைகளிலும் படு தோல்வி அடைந்து விட்டது.

த.மு.கூட்டணி பங்காளியாக இடம்பெறும் எமது ஆட்சியில், மலைநாட்டு பெருந்தோட்ட மாவட்டங்களில் தனி வீடுகளை அமைக்க இந்திய வீட்டு திட்டத்துக்கு நாம் தடை இன்றி காணி வழங்குவோம். தவிர சுயமாக சொந்த வீடுகளை கட்டிக்கொள்ளவும் காணி வழங்குவோம். உழைத்து வாழ கொழும்பு உட்பட மாநகரங்ளில் குடியேறி, இன்று வாடகை வீடுகளில் வாழும் மக்களுக்கு தொடர்மாடி மனைகளை வழங்குவோம். மலைநாட்டில் வாழ்வாதார காணி வழங்கல் மூலம் பெருந்தோட்ட தொழில் துறையில் நமது மக்களை தொழில் முனைவர் பங்காளிகளாக மாற்றுவோம்.  

இந்த கொள்கைகள் தொடர்பிலும், ஒகஸ்ட் 2ஆம் திகதி கொழும்பில் நேரடியாகவும், மெய்நிகர் மூலமாகவும் கூடும் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு அதிகாரபூர்வ தீர்மானங்களை எடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »