தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்த 2,000 ரூபா மானியத்தை 4,000 ரூபாவாக அதிகரிக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு இன்று (29) தீர்மானித்துள்ளது.
தற்போது எமது நாட்டில் வருடாந்த தேயிலை உற்பத்தி 260 மில்லியன் மெற்றிக் தொன்களாகக் குறைந்துள்ளதுடன், அந்தத் தொகையை 300 மில்லியன் மெற்றிக் தொன்களாக அதிகரிக்க திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியள்ளனர்.
தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2,000 ரூபா மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்ட போதிலும், தேயிலை உற்பத்தியை அதிகரிக்க அந்த தொகை போதுமானதாக இல்லையென விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தேயிலை உர மானியத்தை 4,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்திக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் பருவத்திலிருந்து இந்த உர மானியம் வழங்கப்படவுள்ளதுடன், தேயிலை உரத்தின் விலையை 2,000 ரூபாவினால் அரச உர நிறுவனம் குறைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மானியத்திற்காக 02 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதுடன், அந்த தொகையை இலங்கை தேயிலை சபையின் நிதியின் ஊடாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான அமைச்சரவை பத்திரத்தை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.