முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மனித எச்சங்கள் அனைத்தும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அகழ்வு நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த நிலையில் புதைகுழி அமைந்துள்ள பகுதி பகுதியளவில் மூடப்பட்டுள்ளதாக மனிதப் புதைகுழி அகழ்வில் ஈடுபட்டுள்ள விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இந்த மனித புதைகுழி அமைந்துள்ள பகுதி பகுதியளவில் மூடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வில் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுடையது என சந்தேகிக்கப்படும் 12 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன .
இந்த நிலையில் மேலதிக மனித எச்சங்கள் எவையும் இல்லை என்ற அகழ்வாய்வில் ஈடுபட்ட தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையின் அடிப்படையிலும் ஸ்கேன் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையிலும் இந்த மனித புதைகுழி அகழ்வை நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வானது இன்றுடன் பகுதியளவில் மூடப்பட்டுள்ளது.
இன்னும் ஒருசில தினங்களில் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் அதிகாரிகள் முற்றுமுழுதாக இந்த புதைகுழியை மூடுவார்கள் என மனித புதைகுழி அகழ்வில் ஈடுபட்டிருந்த விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.
கடந்த ஜூலை 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு நேற்று திங்கட்கிழமையுடன் பத்து நாட்களை அடைந்துள்ளது. நேற்றைய (15) பத்தாம் நாள் அகழ்வில் 5 மனித எச்சங்களும் ஒரு துப்பாக்கி சன்னமும் திறப்பு கோர்வையும் மீட்க்கப்பட்டன.
கொக்குத்தொடுவாய் புதைகுழி ஏற்கனவே இரண்டு கட்டங்களாக அகழ்ந்தெடுக்கப்பட்டபோது 40 மனித எச்சங்கள் முழுமையாக மீட்க்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வில் மேலதிகமாக 12 மனித எச்சங்கள் முழுமையாக மீட்க்கப்பட்டதோடு மொத்தமாக மூன்று கட்ட அகழ்வுகளிலும் 52 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதலாம் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வுகளின் போது மீட்க்கப்பட்ட மனித எச்சங்களிலிருந்து DNA பரிசோதனைக்கான சான்றுகள் எவையும் சேகரிக்கப்படவில்லை என்றும் கடந்த பத்து நாட்களில் முன்னெடுக்கப்பட்ட மூன்றாம் கட்ட அகழ்விலிருந்தே DNA சான்றுகள் சேகரிக்கப்பட்டதாக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா தெரிவித்தார் .
முதலாம் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் இயந்திரம் மூலம் அகழ்வுப்பணி நடைபெற்று ஏற்கனவே சில எலும்புகூடு தொகுதிகள் சூழலுக்கு வெளிக்காட்டப்பட்ட நிலையில் இருந்ததன் காரணமாக DNA ஆனது துல்லியமாக இருக்காது என்ற காரணமாக மாதிரிகள் சேகரிக்கப்படவில்லை என விசேட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா தெரிவித்தார்.
தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர் , முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் கடந்த 10 நாட்களும் அகழ்வு பணிகள் இடம்பெற்றிருந்தன.
இன்றையதினம் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் நேரடியாக வந்து பார்வையிட்டனர்.