Our Feeds


Wednesday, July 3, 2024

Sri Lanka

ஜனாதிபதியும் அவரது அடிமைகளும் தேர்தலை ஒத்திவைக்க முயற்சி! - சஜித் கடும் சாடல்!



கடந்த காலங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அடிமைகளும், கையாட்களும், சகாக்களும் நாட்டுக்கு எதிர்மறையான செய்திகளை முன்வைத்து ஜனாதிபதி தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது என்ற கருத்தை உருவாக்கி வந்தனர். 


பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இது சரியான தருணம் அல்ல என மக்களை நம்பவைக்கும் வகையில் அரசியல் செயற்திட்டமொன்றை முன்னெடுக்க ஜனாதிபதியும் அவருக்கு நெருக்கமான குழுக்களும் முயற்சித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இவ்வாறான நிலையில் இன்று சட்ட ரீதியாகவும் அரசியலமைப்பு ரீதியாகவும் நடத்தப்பட வேண்டிய ஜனாதிபதி தேர்தலை பறிக்க மேலும் பல முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அரசியலமைப்பை மீறும் சதிகளாகும். செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசியலமைப்பு தெளிவாக கூறினாலும், அரசியலமைப்பு ரீதியாக புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாட்டு மக்களுக்கு இருக்கும் உரிமையை இல்லாதொழித்து, சீர்குலைக்க சில குழுக்கள் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் அரசாங்கத்தின் சதி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பில் இன்று (03) விசேட அறிக்கையொன்றை விடுக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.


இந்நாட்டில் சர்வஜன வாக்குரிமையும் மக்களின் வாக்குரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். மாளிகைகளுக்குள் இருந்து கொண்டு மானங்கெட்ட சதிகள் மூலம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான பின்னணி தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், இந்நாட்டில் ஜனநாயகத்தின் மரணத்தை முன்னெடுக்க வேண்டாம் என பொறுப்புள்ள அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். தேர்தல் உரிமையை உடனடியாக மக்களுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.


அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சுதந்திரமான மற்றும் ஜனநாயக ரீதியாக தேர்தலொன்றை நடத்துவதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளையும், ஜனநாயகம் என்ற பெயரில் பயப்படாமலும், அடிமைப்படாமலும் 220 இலட்சம் நாட்டு மக்களுக்காக வேண்டி எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழு மற்றும் இது தொடர்பான அனைத்து அதிகாரிகளிடமும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். 


அரச இல்லங்களில் நடக்கும் சதிகளை முறியடிக்க வேண்டும். இதன் பொருட்டு  அனைத்துச் சக்திகளையும் ஒன்று திரட்டி, மக்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு ஜனநாயகத்தை பாதுகாக்கும் பயணத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »