ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிராகரித்தமையானது, ரணிலுக்கான பல தரப்புகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு இருந்த அத்தனை தடைகளையும் நீக்கிவிட்டிருப்பதாக பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தான் தீர்மானித்துள்ளதாகவும் தனக்கு ஆதரவை பெற்றுத்தருமாறும் கோரி ரணில் விக்கிரமசிங்கவினால், நேற்று முன்தினம் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை நிராகரித்து பொதுஜன பெரமுனவின் தனியான வேட்பாளரை களமிறக்கப்போவதாக தீர்மானித்திருக்கிறார்கள். இது ரணிலை பலவீனப்படுத்த எடுக்கப்பட்ட தீர்மானமா அல்லது பலவீனமாக இருக்கும் ரணிலை பலமாக்குவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானமா என்ற சந்தேகம் எழுகிறது.
பொதுஜன பெரமுன ஆட்சிக்குள் இருப்பதே, தமிழீழத்துக்காக முன்னிருந்து செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு ரணிலுக்கு இருந்த தடையாகும். அதேபோன்று, கொரோனா காலத்தில் முஸ்லிம் ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்த ராஜபக்ஷக்கள் ஆட்சிக்குள் இருப்பதே, ரணிலுக்கு ஆதரவளிப்பதற்கு ஒருசில முஸ்லிம் கட்சிகளுக்கு இருந்த தடையாகும்.
ரணில் கொள்கைகள் நாட்டுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி அவரை கைவிடவில்லை. மாறாக, அவரால் வெற்றியடைய முடியாது என்பதனாலேயே ஐக்கிய மக்கள் சக்தி ரணிலை கைவிட்டது. அவ்வாறு பிரிந்த ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் ரணிலுடன் இணைவதற்கு ராஜபக்ஷக்களே தடையாக இருந்தார்கள். ஆகவே, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏதாவதொரு முறையில் ஆதரவை பெற்றுக்கொடுப்பதற்கான ஒரு முயற்சியாக ராஜபக்ஷக்களின் தீர்மானம் அமையலாம்.
இந்தத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுர குமார திசாநாயக்க, விஜேதாச ராஜபக்ஷ, சரத் பொன்சேகா ஆகியோரே இதுவரையில் வேட்பாளர்களாக களமிறங்கியிருக்கிறார்கள். ஐவரும் நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள் என்பதே இவர்களுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமையாகும். 69 இலட்சம் மக்களால் நிராகரிக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐவரும் வேறு வேறு தரப்பாக போட்டியிட்டாலும் ஒரு நிலைப்பாட்டை கொண்டவர்களாவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
Wednesday, July 31, 2024
ரணிலின் ‘ரூட் க்ளியர்’ சொல்கிறார் கம்மன்பில!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »