எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி தொடர்பில் கருத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
சில கட்சிகள் தேர்தலை தாமதப்படுத்த முயற்சிப்பதால் தங்களுக்கும் பாதுகாப்புகள் குறித்து சந்தேகம் எழுவதாக அவர் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
''ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் படுகொலை முயற்சி ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்.
அரசியல்வாதிகள் இவ்வாறான அரசியலில் ஈடுபடுவதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் எனவும். அதேபோன்று இலங்கையிலும் சில அரசியல் கட்சிகள் தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை பூர்த்தி செய்ய முடியாத போது இவ்வாறான தந்திரோபாயங்களைப் பயன்படுத்த முனைகின்றன.
கடந்த காலங்களிலும் அவர்கள் வேட்பாளர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாம் ஒரு ஜனநாயக நாடு. ஒரு ஜனநாயக நாடு பொது ஆணை மற்றும் தேர்தல்களுடன் அரசியலை நடத்துகிறது, ஆயுதங்களுடன் அல்ல. அதனால்தான் அரசிடம் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன்.
சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பு தொடர்பில் எமக்கு எந்த சந்தேகமும் இருக்க கூடாது” என அவர் மேலும் தெரிவித்தார்.