தேசபந்து தென்னகோன் எதிர்காலத்தில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றினால் அது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் பிரதமர் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
''நாயை குளிப்பாட்டுவதற்கு அழைத்துச் செல்வது போல் இந்த ஜனாதிபதி இந்த தேர்தலை வழிநடத்துகிறார். குறிப்பாக, தேர்தலை சந்திக்காமல் தனது இருப்பை எப்படி பலப்படுத்துவது என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் முயற்சி செய்து வந்தார். சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த பொலிஸ் மா அதிபர் நியமனத்தை தவிர்த்து வந்தார். மேலும் இன்று பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட மாட்டார் என்றும் பதவி வெற்றிடமில்லை என்றும் கூறுகின்றனர். தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் நீண்ட விளக்கமளிக்கவுள்ளார். முடிந்தால் இன்று நீங்கள் சொன்ன கதையை வெளியே சென்று சொல்லுங்கள் என்று தினேஷ் குணவர்தனவுக்கு சவால் விடுகிறோம்''. என்றார்.