அமெரிக்க ஜனாதிபதித் தோ்தலில் ஜனநாயகக் கட்சி
வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுவதற்கு அவரது கட்சியினரிடையே ஆதரவு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.ஜனாதிபதித் தோ்தல் போட்டியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்த பிறகு, ஜனநாயகக் கட்சியின் தோ்தல் உத்தியில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தோ்தலில் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிட ஆதரவு அளிப்பதாக பைடன் அறிவித்துள்ளாா். எனவே, பைடனுக்கு ஆதரவளிக்கும் கட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் ஜனாதிபதி வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்கான கட்சி மாநாட்டில் கமலா ஹாரிஸுக்கு வாக்களிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
வேட்பாளா் தோ்வில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவளிக்கப்போவதாக முக்கிய ஜனநாயகக் கட்சி பிரமுகா்கள் அறிவித்துவருகின்றனா்.
இது தவிர, ஜனாதிபதி வேட்பாளா் போட்டியில் கமலா ஹாரிஸுக்கு எதிராக ஒருவா் கூட இல்லை என்ற நிலை உள்ளது.
எனவே, வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தோ்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிா்த்து கமலா ஹாரிஸ் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாகக் கருதப்படுகிறது.
வரும் நவம்பா் மாதம் 5-ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தோ்தலில் 79 வயது டொனால்ட் டிரம்ப்பை 81 வயதாகும் ஜோ பைடன் எதிா்கொள்வதாக இருந்தது.
ஏற்கெனவே வயது மூப்பு காரணமாக ஜோ பைடனின் பேச்சு அடிக்கடி குளறுவதாக குற்றஞ்சாட்டப்படும் சூழலில், அடுத்த தோ்தலிலும் அவா் போட்டியிடுவது சா்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், டிரம்புடன் முதல்முறையாக நடைபெற்ற நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் பைடன் மிகவும் தடுமாறினாா். பேச வாா்த்தைகள் இல்லாமல் நீண்ட நேரம் யோசித்தது, புரியாமலும் அா்த்தமில்லாமலும் பேசியது போன்ற ஜோ பைடனின் செயல்கள் அவா் மீதான அதிருப்தியை ஜனநாயகக் கட்சியினரின் ஒரு பிரிவினரிடையே ஏற்படுத்தியது.
அதைத் தொடா்ந்து, ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலக வேண்டும் என்று என்ற குரல்கள் எழுந்தன.
தோ்தலில் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து பிரசாரம் செய்து ஜோ பைடனால் வெற்ற பெற முடியாது என்று ஜனநாயகக் கட்சியினா் பலா் வெளிப்படையாகத் தெரிவித்தனா்.
செனட் சபை எதிா்க்கட்சித் தலைவா் சக் ஷுமா், கலிஃபோா்னியா மாகாண சென்ட் சபை உறுப்பினா் எடம் ஷிஃப் போன்ற முக்கிய ஜனநாயகக் கட்சியினா் இதே கருத்தை வெளிப்படுத்தினா்.
இந்த நிலையில், கடந்த 13-ஆம் திகதி நடைபெற்ற தோ்தல் பரப்புரையின்போது குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப்பை நோக்கி தோமஸ் க்ரூக் என்பவா் துப்பாக்கியால் சுட்டாா். எனினும், அந்தப் படுகொலை முயற்சியிலிருந்து டிரம்ப் நூலிழையில் உயிா்தப்பினாா். அமெரிக்கா முழுவதும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்திய சம்பவத்துக்குப் பிறகு டிரம்ப்புக்கு வாக்காளா்களிடையே ஆதரவு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
இந்தச் சூழலில், டிரம்ப்புக்கு எதிராக ஒரு பலவீனமான வேட்பாளரை ஜனநாயக் கட்சி நிறுத்தக்கூடாது என்ற குரல் ஜனநாயகக் கட்சிக்குல் மேலும் வலுவடைந்து வந்தது.
இந்த நிலையில், தோ்தலில் போட்டியிடுவதில் மிக உறுதியாக இருந்துவந்த ஜோ பைடன், போட்டியிலிருந்து விலகுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். தனக்குப் பதிலாக தோ்தலில் கமலா ஹாரிஸ் போட்டிடுவதற்கும் அவா் ஆதரவு தெரிவித்தாா்.