தற்போதைய ரணில் அரசாங்கம் தொடர்பிலான பொது மக்களின்
அங்கீகாரம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.இது 24 வீதமாக காணப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் பொருளாதார திசை குறித்து நம்பிக்கையுடன் எண்ணுவதாக இந்த ஆய்வு நிறுவனம் நடத்திய ”நாடு எண்ணும் விதம்” என்ற மக்கள் மதிப்பீட்டின் முடிவுகளில் இவ்விடயங்கள் வெளிவந்துள்ளன.
அந்த முடிவுகளின்படி, அரசாங்கம் தொடர்பில் பொதுமக்களின் அங்கீகாரம் கடந்த பெப்ரவரி மாதத்தில் 7 வீதத்தை எட்டியிருந்தது.
அது சமீபத்திய மதிப்பீட்டு முடிவுகளின்படி 24 வீதமாக அதிகரித்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனம் தெரிவிக்கின்றது.
மதிப்பீட்டில் பங்கேற்றவர்களில் 28 வீதமானோர், தற்போதைய பொருளாதார நிலையை நல்லது அல்லது சிறந்தது என வகைப்படுத்தியுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதத்தில் காணப்பட்ட 9 வீத மதிப்பை விட
இது மூன்று மடங்கு அதிகரிப்பாகும்.அதேவேளை, நாட்டின் பொருளாதார நிலை மேம்படும் என நம்பும் பொது மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதத்தில் இது 9 வீதமாக காணப்பட்ட நிலையில் இம்மாதத்தில் அது 30 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த சமீபத்திய கணக்கெடுப்பு, பல கட்ட செயல்முறை மூலம் சமவாய்ப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெவ்வேறு வீடுகளில் வசிக்கும் 1,038 இலங்கை பெரியவர்களின் தேசிய பிரதிநிதித்துவ நாடளாவிய பதில் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.
இந்த கணக்கெடுப்பு கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 6ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டதாக வெரிட்டி ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.