Our Feeds


Saturday, July 20, 2024

Sri Lanka

ஜனாதிபதி ரணில் - விஜேதாச மோதல்: அமைச்சுப் பதவியை பறிக்க திட்டம்? எனத் தகவல்.



22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வர்த்தமானி மூலம் பிரசுரித்தமை தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தமது கண்டனத்தை பதிவுசெய்துள்ளார்.


ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக மக்கள் மத்தியில் நிச்சயமற்ற கருத்துக்கள் உருவாகுவதை தடுக்கவே உரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடாமல் இடைநிறுத்தி வைத்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஆனால், இந்த விடயம் தொடர்பாக எவராவது மாறுபட்ட கண்ணோட்டத்தில் செயல்பட்டால், அதன் முடிவுகளை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.


மக்கள் மீது நல்லெண்ணம் கொண்டே ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டாம் என அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


எனினும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோரினால் அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


இந்த விவகாரத்தால் ரணில் விக்ரமசிங்கவுக்கும் விஜேதாச ராஜபக்சவுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் முற்றியுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.


விஜேதாச ராஜபக்சவின் அமைச்சுப் பதவியை உடனடியாக பறிக்க வேண்டுமென அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.


என்றாலும், இத்தருணத்தில் விஜேதாச ராஜபக்சவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கினால் அது அரசாங்கத்துக்கு பாதாகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தும் என்பதால் விஜேதாச ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுத்து அவராகவே அமைச்சுப் பதவியை துறக்கும் சூழ்நிலையை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் தெரியவருகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »