Our Feeds


Wednesday, July 31, 2024

Sri Lanka

மாணவி வித்தியா படுகொலை வழக்கின் மேன்முறையீட்டு மனு - விசாரணைக்கு திகதி குறித்தது உயர் நீதி மன்றம்.



2015ம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணத்தில் சிவலோகநாதன் வித்தியா என்ற சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், யாழ். மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆறு பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 20ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.  


இந்த மேன்முறையீட்டு மனுக்கள் நேற்று (30) ப்ரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.


இதன்போது, இந்த வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.


 இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, இந்த பிரதிவாதிகள் 08 வருடங்களுக்கும் மேலாக சிறைச்சாலையில் உள்ளதாக பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


அப்போது, ​​இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக சொலிசிட்டர் ஜெனரல் அயேஷா ஜினசேன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


இந்த பிரதிவாதிகள் கொலை, சதி மற்றும் சட்டவிரோத குடியேற்றம் ஆகிய குற்றங்களில் குற்றவாளிகளாக உள்ளதாக தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல், யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பிரதிவாதிகள் இருவர் விடுவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.


முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை மேல்முறையீட்டு-பிரதிவாதிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சொலிசிட்டர் ஜெனரலுக்கு அறிவித்தது.


அதன்பிறகு, இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 20-ம் திகதி மேற்கொள்ள நீதிமன்றம் திகதி நிர்ணயித்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »