பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை விட்டுவிட்டு,
அன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணத்தை செலவிட்டிருந்தால், இன்று நாடு மிக மோசமான அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.நிதி ஒதுக்கீட்டின்போது, அன்று தேர்தலை விட பல்வேறு விடயங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி முன்னெடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நேற்று(20) நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளை போல இலங்கையை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். பல கட்சிகள் இருக்கலாம். ஆனால் இலக்கு ஒன்றாக இருக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் தனித்தனியாகச் செயல்படும் நேரங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு கட்டமைப்பில் ஒன்றாக வேலை செய்வதற்கான இயலுமையையும் கொண்டிருக்க வேண்டும்.
வேலையின்மையினால் பாதிக்கப்பட்டுள்ள இளையோருக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் தற்போது உருவாகியுள்ளது. இதன்போது நாட்டில் 25% ஆக வறியவர்கள் உள்ளனர் என்பதையும் மறந்துவிட முடியாது.
அந்த நிலையில் இருந்து மக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான பல்வேறு பொருளாதார திட்டங்கள் உள்ளன. அவற்றை செயல்படுத்தி, கிராமப்புறங்களிலுள்ள வறியவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.
பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளோம். பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்தோம். அத்துடன், பழைய முறையில் மாகாண சபைகள் செயற்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் முன்மொழிந்துள்ளார். அந்த முன்மொழி குறித்து எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. ஆனால் மாகாண சபைகளிலும் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்.
மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் உள்ளிட்ட கட்சிகள் கடந்த ஆறு மாதங்களாக ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களை செய்து வருகின்றன. அந்த கட்சிகள் ஒரு வருடமாக அதற்காக பாடுபடுகின்றனர். நாம் உரிய நேரத்தில் பணிகளை ஆரம்பிப்போம். நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.